சுருதிஹாசனுடன் படஅதிபர் சமரசம் : வழக்கை வாபஸ் பெற முடிவு!!

585

Sruthi

கார்த்தி, நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் பி.வி.பி. சினிமா படநிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக சுருதிஹாசனை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அந்த படத்தில் இருந்து அவர் திடீரென விலகிவிட்டார்.

இதையடுத்து சுருதிஹாசன் மீது பட நிறுவனம் ஐதராபாத் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. சுருதி விலகியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டுள்ளார் என்றும் மனுவில் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புதுப்படங்களில் சுருதிஹாசன் நடிக்க தடை விதித்தார். இதையடுத்து தடையை நீக்க கோரி சுருதி ஐதராபாத் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஒப்பந்தத்தை மீறி படக்குழுவினர் செயல்பட்டனர் என்றும், கால்சீட் விவரங்களை ஒரு மாதத்துக்கு முன்பே தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தும் ஏப் 1–ந் தேதி படப்பிடிப்புக்கு மார்ச் 17ம் திகதிதான் தகவல் தெரிவித்தனர் என்றும் கூறி இருந்தார்.

புதிய படத்தில் பிசியாக நடித்ததால் திகதிகள் ஒதுக்க முடியவில்லை என்றும், வழக்கு போடுவதற்கு முன்பே தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டனர் என்றும் மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை 20ம் திகதி நடைபெறும் என்று நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் பி.வி.பி. தயாரிப்பு நிறுவனம் மீது நடிகர் சங்கத்தில் சுருதிஹாசன் புகார் செய்தார். இதுபோல் தயாரிப்பாளர் சங்கத்தில் சுருதிஹாசன் மீது பட நிறுவனம் புகார் அளித்தது.

இந்த பிரச்சினையில் சமரச தீர்ப்பு காண நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நடிகர் சங்கம் சார்பில் சரத்குமார், விஜயகுமார், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைப்புலி தாணு, பி.எல்.தேனப்பன், டி.சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

பி.வி.பி. சினிமா சார்பில் ராஜீவ் காம்னேனி கலந்து கொண்டார். மும்பையில் இருந்த சுருதிஹாசனிடம், சரத்குமாரும், கலைப்புலி தாணுவும் போனில் பேசினர். இருவரும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தினர். சுருதிஹாசன் வாங்கிய முன்பணத் தொகையை திரும்பி கொடுத்து விட வேண்டும் என்றும், படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை இருவரும் ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து இப்பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக ஒப்பந்தத்தில் வருகிற 21ம் திகதி கையெழுத்திடவும் இரு தரப்பினரும் சம்மதித்தனர். பிரச்சினைக்கு சுமூக தீர்வு கண்ட நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கும், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணுவுக்கும் நன்றி தெரிவித்தனர்.