இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அலுவலகம் வன்னி, யாழ் இரண்டாக பிரிப்பு!ஊழியர்கள் அதிருப்தி !

538

jaffna-bus-stand1

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாற்றப்பட்டுள்ளது.

அரச அமைச்சரான விஜயகலா மகேஸ்வரனின்; தனிப்பட்ட காரணத்திற்காகவே இந்த மாற்றம் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சபையினில் பெரும் சர்ச்சையை ஏற்பட்டு;ள்ளது.

ஏற்கனவே வடபிராந்திய முகாமையாளராக இருந்த இருந்த ஏ.அஸ்கர் என்பவர் கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய முகாமையாளராக நேற்று முன்தினம் முதல் சி.கேதீஸன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வடமாகாண போக்குவரத்து சபை இரண்டாக பிரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கேதீஸன் முகாமையாளராகவும், வன்னிக்கு ஏ.அஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



அதற்கமைய 7 சாலைகளை கொண்ட வட பிராந்தியத்தில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் , கிளிநொச்சி ஆகியவற்றை யாழ். பிராந்தியமாகவும் மன்னார் வவுனியா, முல்லைத்தீவு ஆகியவற்றைக் கொண்ட வன்னி பிராந்தியமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் இவ்வாறு இரண்டு பிரிவுகள் இருப்பதனை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே வடபிராந்திய முகாமையாளராக இருந்த அஸ்கர் ஊழல் மோசடியிலேயே இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக பிரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாண இ.போ.ச ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மேற்கொண்டனர்.இதனால் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.