வவுனியா விவசாய கல்லூரியில் தொடரும் விரிவுரையாளர் பற்றாக்குறையினால் அதிருப்தியின் உச்சத்தில் மாணவர்கள்!

781

vivasayam-300x225

வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளர் பற்றாக்குறை நிலவுவதால் விரிவுரைகள் சீராக இடம்பெறாமையை முன்னிட்டு கவலை கொள்கின்றோம். இதன் காரணமாக கற்கைகளை தொடர்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன் இந்நிலமை கடந்த தசாப்தகாலங்களாக தொடர்வதால் பூரணத்துவமான பயிற்சியை நிறைவு செய்யாத மாணவர்களாகவே வெளியேற வேண்டி நிலமை ஏற்பட்டுள்ளமையையிட்டு அதிருப்தி கொள்கின்றோம். என விவசாயக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்;

எமது விவசாயக் கல்லூரி பேராதனை விவசாய திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்றது. இலங்கையின் விவசாயத்தை மேம்படுத்த அரசினால் பல்வேறு விதமான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு விதமான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு இலங்கையின் விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்ற போதும் தமிழ்மொழி மூலத்தில் விவசாயக் கல்லூரியில் விவசாயக்கல்வியைத் தொடரும் நாம் வெகுவாக புறக்கணிக்கப்படுவதாகவே உணர்கின்றோம்.



அந்த வகையில் எமது கல்லூரிக்கான நிரந்தர விரிவுரையாளர்களை வழங்குவதில் காட்டப்படும் அசமந்தப் போக்கினால் நாம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றோம்.

இங்கு, முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கான இருபது வரையான பாடநெறிகளுக்கான விரிவுரைகளை நிகழ்த்த நிரந்தர நியமனம் பெற்ற நான்கு விரிவுரையாளர்களே காணப்படுகின்றனர். இந்நிலையில் இலங்கையில் எங்கும் இல்லாத வகையில் ஒரு விரிவுரையாளருக்கென குறித்து ஒதுக்கப்படுகின்ற நேரத்திற்கு மேலதிகமாக விரிவுரையாளர்களினால் விரிவுரைகள் நடாத்தப்பட வேண்டிய அசௌகரிய நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக எந்தவொரு கற்கைகளையும் பூரணத்துவமாக குறித்த நேரகாலத்தில் முடிவுறுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையே கடந்த தசாப்பத காலமாக இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை இலங்கையில் காணப்படும் ஏனைய நான்கு விவசாயக்கல்லூரிகளிலும் சிங்கள மூல பாடநெறிகளுக்கு போதிய அளவில் விரிவுரையாளர்கள் காணப்படுவதாக அறியப்படுகின்ற போதும் தனியாக தமிழ்மொழி மூல மாணவர்களை மாத்திரமே கொண்ட வவுனியா விவசாயக் கல்லூரிக்கென நிரந்தரமான விரிவுரையாளர்களை வழங்குவதில் அசமந்தப்போக்கை கடைப்பிடிக்கின்றர்..

அதேவேளை விரிவுரையாளர்களை கோரும் போது ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதனால் வௌ;வேறு நிரந்தர நியமனங்களுடன் அவர்கள் வெளியேறி வருவது தொடர்கதையாக இடம்பெற்று வருகின்றது. இதன்போது குறித்த ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட விரிவுரையாளர்களால் தொடரப்பட்ட பாடநெறிகள் வேறு விரிவுரையாளர்களிடம் பாரப்படுத்தப்படுவதால் பின்வரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றோம்.

  1. மேற்கூறப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் வருகை தந்து வெளியேறிய விரிவுரையாளர்கள் மேற்கொள்ளப்பட்ட செய்முறைகளை தெளிவாக முடிவு செய்ய முடியாமை.
  2. விரிவுரையாளர் மாற்றத்தினால் ஏற்படும் உளத்தாக்கத்திற்கு உள்ளாகுதல்.
  3. குறித்த காலப்பகுதியில் பாடநெறியை பூர்;த்தி செய்யமுடியாமை.
  4. போதியளவான களப்பயிற்ச்சியை பெறமுடியாதுள்ளமை.
  5. தொடர் மதிப்பீட்டு பரீட்சைகள் தொடர்பான சிக்கல்கள் போன்ற இதர பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம்.

இவ்வாறாக எம்மால் அறியப்படும் வகையில் கடந்த வருடத்தில், அதற்கு முன் ஒப்பந்த அடிப்படையில் வருகைதந்த இரு விரிவுரையாளர்கள் இடைநடுவே நிரந்தர நியமனம் பெற்றுச் சென்றுள்ளனர்.

தற்போது எட்டு ஒப்பந்த அடிப்படையிலான விரிவுரையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கமைய எமக்கு பாடநேரசூசி தரப்பட்ட போதும் அதில் ஐந்து விரிவுரையாளர்களே வருகை தந்த நிலையில் அவர்களில் இருவர் வேறு நிரந்தர நியமனம் கிடைக்கப்பெற்று வெளியேற மிகுதியாக மூன்று ஒப்பந்த அடிப்படையிலான விரிவுரையாளர்களே தற்போது உள்ளனர்.

இவ்வாறு வருகைநிலை விரிவுரையாளர்களாலும் சில விரிவுரைகள் இடம்பெற்று வருவதுடன் இவ்வாறான நிலமையிலும் பூரண களப்பயிற்சியை பெறமுடியாது உள்ளதுடன் சீரான, முறையான விரிவுரைகளை எதிர்பார்க்க முடியாதுள்ளது. அத்துடன் வருகை நிலை விரிவுரையாளர்களினால் மேற்கொள்ளப்படும் விரிவுரைகள் கிழமை நாட்களில் இடம்பெறாது சனி, ஞாயிறு தினங்களிலும், விடுமுறை நாட்களில் இடம்பெறுவதால் விடுமுறைகள் இன்றி தொடர்ந்து மனவிரக்தியுடன் கற்றலை தொடர வேண்டிய கசப்பான அனுபவங்களை சந்திக்கின்றோம்.

அத்துடன் முதலாம் வருடத்தில் தமிழ்மொழி மூலம் கற்கையைத் தொடர்ந்து தேசிய தொழிற்றகமை மட்டம் 6 செயற்றிட்டத்திற்கு அமைவாக இரண்டாம் வருடத்தில் ஆங்கில மூலத்தில் கற்கையைத் தொடரும் இரண்டாம் வருட மாணவர்களின் நிலமை விரிவுரையாளர் பற்றாக்குறை, விரிவுரைகள் இடம்பெறாமை போன்ற பிரச்சினைகளால் மேலும் மோசமடையும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் அரையாண்டுப் பரீட்சைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் குறித்த ஆறு மாத காலத்தினுள் முழுப்பாட நெறிகளையும், அதற்கான செய்முறை மற்றும் களப்பயிற்சியை நிறைவு செய்ய வேண்டியுளள் நிலையில் விரிவுரையாளர் பற்றாக்குறை சார்ந்த மேற்படி சிக்கல் நிலமைகளால் மீட்சியுறமுடியாத கட்டத்தை நாம் நெருங்கியுள்ளோம். இவ்வாறான நிலமைகளில் அரையாண்டு பரீட்சைகளை எதிர்நோக்குவது பாரிய சவாலாக உள்ளதுடன் தேசிய தொழிற்றகைமை மட்டம் 6 இற்குரிய செயற்றிட்டங்களை முன்னெடுப்பதிலும் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றோம்.

இது இவ்வாறிருக்க, இலங்கை விவசாயக்கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களே விவசாய போதனாசிரியர்களாக வெளிவரும் நிலையில், வவுனியாவில் கற்கையை தொடரும் மாணவர்களும் குண்டசாலையில் தமிழ்மொழி மூலத்தில் கல்வியைத் தொடரும் மாணவர்களுமே இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் பிரதேசங்களில் கடமையாற்றும் விவசாயப் போதனாசிரியர்களாக நியமனம் பெறுவார்கள். இதன்படி பூரண களப்பயிற்சியை பெறாத மாணவர்களாக வெளியேறும் இந்நிலமை வடக்கு, கிழக்கின் எதிர்கால விவிசாயத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்ப்படுத்தும் துர்அதிஷ்ட நிலமையையே ஏற்படுத்தம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து மிக விரைவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கோருவதுடன் விவசாயக்கல்லூரியில் கல்வி கற்று இன்று ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள எம் மதிப்பிற்குரிய கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இது தொடர்பில் கரிசனையுடன் செயற்படுவார் என எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கும் உத்தியோக பூர்வமாக தெரியப்படுத்தவுள்ளோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :www.ekuruvi.com