மயூரன் உள்ளிட்ட 8 பேருக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது : மதகுருவின் அதிர்ச்சித் தகவல்!!

604

Mayuran

நேற்று முன் தினம் இந்தோனேசியாவில் எட்டுப் பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த எட்டுப் பேரும் எவ்வாறு சுடப்பட்டு, மரணத்தை தழுவினார்கள் என்பதை நேரில் கண்ட கிறிஸ்தவ பாதிரியார் விபரித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜைகளான மயூரன் சுகுமாரனும், அன்ட்ரூ சானும் கௌரவத்துடன் மரணத்தை எதிர்கொள்வதற்கு திடசங்கற்பம் பூண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை கைதிகள் துப்பாக்கி வேட்டுக்களை நெஞ்சில் தாங்கி மரணத்தைத் தழுவும் பகுதிக்கு பாதிரியார் சார்ளி பரோவ்ஸ் சென்றிருந்தார்.

மயூரனும், சானும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கைகுலுக்கி விட்டு கொலைக்களத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் தன்னுடன் பேசியதாக பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இருவரும் புனர்வாழ்வு பெற்ற விதத்தை தாம் நினைவு கூர்ந்தனர். அவர்களது மாற்றம் பற்றி நான் பாராட்டிப் பேசினேன். எனது பணிகளை இருவரும் பாராட்டினார்கள். அவை தான் இருவரும் பேசிய கடைசி வார்த்தைகள் என அவர் குறிப்பிட்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட சகலரும் தடிகளில் பிணைக்கப்பட்டார்கள். துப்பாக்கியால் சுடப்படும் வேளையில், ஒருவரும் அசையாதிருப்பதை உறுதி செய்வது அதன் நோக்கமாக இருந்தது.

கைதிகள் அனைவரும் உறுதியாக இருந்தார்கள். பக்திப் பாடல்களைப் பாடினார்கள். ஒருவரும் கண்ணைக் கட்டிக் கொள்ளவில்லை. மரணத்தை சந்திக்கும் தருணத்தில் உறுதியாக இருந்தால், தமது பெற்றோரின் கவலை குறையும் என்பது நோக்கமாக இருந்தது. தமது மகன் மரணிக்கும் தருணத்தில் அழுதார் என்பதைக் கேள்விப்பட்டால், பெற்றோர் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் அல்லவா? அவர்கள் கதறவில்லை. அமைதியான முறையில் உயிரைப் பிரித்தனர் என பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.