மனைவி விடுமுறை நிமித்தம் வௌிநாட்டிற்கு சென்றிருந்த வேளை, தனது கள்ளக் காதலியைக் கொன்றதாக கூறப்படும் இலங்கையர் ஒருவருக்கு பஹ்ரெனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹென்றி ஜோஸ்டன் டி சில்வா எனும் இவர் பிரிலிகா குமாரி என்ற பெண்ணுடன் தொடர்பினை பேணி வந்துள்ளதாகவும், அவர் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே கொலை செய்துள்ளதாகவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தான் பிரிதொரு ஆடவருடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து கொலையாளி தனது பேஸ்புக்கை ஹக் செய்துள்ளதாக, கொலை செய்யப்படும் முன் பாதிக்கப்பட்ட பெண் தனது தோழியிடம் கூறியுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதமளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதேநாளில் கொலையாளி அந்தப் பெண்ணை வேலை முடிந்ததும் வீட்டுக்கு அழைத்துச் சென்று வெற்றுக் கைகளாலேயே அடித்துக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பின், விபத்தில் அவர் இறந்தது போல் காட்ட, சடலத்தை சமயலறைக்கு எடுத்துச் சென்று சமயல் எரிவாயுவைத் திறந்து பற்ற வைக்க முயற்சித்துள்ளார்.
எனினும் அவரது அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. எரிவாயு மணம் காரணமாக அயலவர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்றையதினம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.






