வவுனியா பேயாடிகூழாங்குளத்தில் உள்ள பொதுக்காணியை கிராமத்தின் தேவைக்காக தரக்கோரி பேயாடிகூழாங்களம் மக்கள் இன்று(03.05) காலை பொது காணியின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீள்குடியேறிய மக்கள் கிராமத்திற்கு பொது மண்டபமோ முன்பள்ளியோ இல்லாத நிலையில் பிரதேச செயலாளர் தமது கிராம பொதுக்காணியை திருமறைக்கலாமன்றம் என்ற அமைப்புக்கு கொடுத்துள்ளதாகவும் இவ்வாறான செயலை தாம் கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை தமது கிராமத்தின் பாடசாலை, ஆலயம், முன்பள்ளி என்பன ஆரம்பத்தில் இருந்தபோதிலும் அது தற்போது இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில் கிராமத்திற்கு இருந்த பொதுக்காணியையும் பிரதேச செயலாளர் தன்னிச்சையாக வேறு தேவைக்கு வழங்கியுள்ளார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பிரதேச செயலளாளர் ஏன் இப்படி நம்பிக்கை துரோகம் செய்தார், எங்கள் அரை ஏக்கர் பொது காணியை எங்களுக்கே மீட்டுத்தாருங்கள், எங்களுக்கு வேறு பொதுக்காணி இல்லை என்ற வாசங்களை எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.






