கனடா- ரொறொன்ரொவில் 11 வயது தமிழ் சிறுமியை துப்பாக்கி முனையில் பணயம் வைத்து நகைக் கடையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் கடந்த 2014 ஓகஸ்ட் 1ம் திகதி இடம்பெற்றுள்ளது.
ரொறொன்ரொவில் கிப்லிங் மற்றும் Steel வீதிக்கருகில் அமைந்துள்ள ஏசியா கோல்ட் நகை கடையில் இந்தக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளை சம்பவத்தின் போது சந்தேக நபர் ஒருவர் 11-வயது சிறுமி மீது துப்பாக்கி விசையை பல தடவைகள் இழுத்துள்ளார். ஆனால் துப்பாக்கியில் இருந்து குண்டுகள் வெளிவரவில்லை.
இதனால் சிறுமி தப்பியுள்ளார். பின்னர் நகைக் கடைக்குச் சொந்தகாரர் மீதும் சுட முயன்ற போது அவர் இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
இரண்டாவது பெண் சந்தேக நபர் கையில் டேசர் ஒன்றை வைத்திருந்து இரு ஊழியர்களை பயமுறுத்தியுள்ளார்.
இரண்டு பெண் சந்தேக நபர்களும் கடையில் இருந்த நகைகளை திருடிக் கொண்டு பிஎம்டபிள்யு வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.
இருவரும் கறுப்பு நிறமுடைய 22 மற்றும் 27-வயதுடையவர்கள் எனவும் ஒருவர் பின்னிய தலை முடியுடையவர் என்றும் மற்றவர் தோள்- நீள பிறவுன் முடி கொண்டவர் எனவும் அடையாளம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் 1-866-786-5423 EXT. 6620 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அனாமதேய குறிப்புக்கள் 1-866-222-TIPS என்ற இலக்கத்தில் கிரைம் ஸ்ரொப்பசிற்கு அனுப்பலாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.







