வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் : நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது படிப்படியாகவே நிகழவேண்டும் : எம்.ஏ.சுமந்திரன்!!

335

Va

நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது படிப்படியாகவே நிகழவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நேற்று (04.05) இடம்பெற்றது. இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்..

இன்றைய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டது. இதில் விசேடமாக 19 ஆவது அரசியல் அமைப்பு சீர் திருத்த சட்டத்தின் விடயங்கள் அதன் தாக்கம் தொடர்பாகவும் அதனால் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடினோம்.

இதன் பின்னர் தற்போது நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ள தேர்தல் திருத்த சட்டம் தொடர்பாகவும் எமது உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பாக எங்களுடைய நிலைப்பாட்டை எவ்வாறு எடுப்பது என நாங்கள் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். அதன் நிமிர்த்தம் பிரேரிக்கப்பட்ட வித்தியாசமான முறைகளை சரியாக படித்து ஆராய்ந்து அதற்கும் மேலாக எங்களுடைய யோசனைகள் ஏதாவது இருக்குமாயின் அதனையும் பிரேரிக்குமாறு ஒரு குழு நியமிக்கப்பட்டு இருவார அவகாசத்தினுள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளோம்.

வரப்போகின்ற தேர்தல் காரணமாகவும் அரசியல் நிலை காரணமாகவும் எங்களுடைய நிலைப்பாடுகளை அடி மட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அரசியல் விழிப்புணர்ச்சி செயலமர்வுகளாக அல்லது மக்கள் சந்திப்புகளாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் பொய் பிரசாரத்திற்கு பதில் கொடுக்கும் முகமாகவும் மத்திய குழு உறுப்பினர்கள் அவதானமாக இருந்து அவ்வப்போது தேவைப்பட்டால் அதற்கான சரியான விளக்கத்தை தெரிவிப்பதற்குமான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கைகள் சில எடுக்கப்பட்டுள்ளன. அதிலும் முக்கியமாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் மார்ச் முதலாம் திகதியில் இருந்து கட்சி உறுப்புரிமையில் இருந்து விலக்கப்பட்டிருந்தார். அவர் தானும் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்திருந்தார்.

தேர்தல் ஆணையகமும் அதனை ஏற்று அவருடைய இடத்திற்கு இன்னொருவரை நியமிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளது. நாங்கள் விசாரணை இல்லாமலேயே நீக்கிய ஒரு உறுப்பினர். அதற்கு பிரதான காரணம் விசாரிப்பதற்கு அவர் எங்கே என்று கூட தெரியாமல் அவர் தலைமறைவாகியுள்ளார்.

ஏனையோருக்கு நாம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம் பதில் அளிக்காதவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், விளக்கம் அளித்தவர்கள் மீது விசாரணை குழு ஒன்றை நியமித்து விசாரணை செய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அது விசாரணை நடத்தி மத்திய செயற்குழுவுக்குமிக விரைவாக அறிக்கையை வழங்கமாறும் இன்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இரவோடு இரவாக நாட்டில் நல்லாட்சி வந்து விடவில்லை. அது படிப்படியாக நிகழவேண்டிய விடயம். 19 ஆவது அரசியல் அமைப்பு தீருத்த சட்டம் நல்லாட்சி நாட்டில் மீளவும் முளை விடுவதற்கு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை என தெரிவித்தார்.