ஆண் குழந்தையை பெற உதவும் மருந்துக்கு திடீர் தடை!!

451

Samy

பாபா ராம்தேவின் நிறுவனம் தயாரித்துள்ள புத்ரஜீவக் பீஜ் ஆயுர்வேத மருந்தை விற்பனை செய்ய மத்தியப்பிரதேசம் மாநில அரசு இன்று திடீர் தடை விதித்துள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வருகிற திவ்யா பார்மசி மருந்து நிறுவனம், ஆண் குழந்தைகளை மட்டுமே பெண்கள் பெற்றெடுக்க உதவும் ´புத்ரஜீவக் பீஜ்´ ஆயுர்வேத மருந்தினை தயாரித்து விற்பனை செய்து வருவதாக டெல்லி மேல்-சபையில் பெரும் சர்ச்சை எழுந்தது.

இந்த பிரச்சனையை ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் கே.சி.தியாகி எழுப்பியபோது, சமாஜ்வாடி உறுப்பினர் ஜெயா பச்சன் உள்ளிட்ட பல எம்.பி.க்கள் அவரது கருத்தை ஆதரித்தனர். ஆண்-பெண் பாலின விகிதாச்சாரம் குறைந்து வருகிற நிலையில், இப்படி ஒரு மருந்தினை தயாரிக்க எப்படி உரிமம் வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். மத்திய அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்கும் என சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா உறுதி அளித்தார்.

இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ், ஆண், பெண் என்ற பாலினத்தை தீர்மானிப்பதில் ´புத்ரஜீவக் பீஜ்´ எதுவும் செய்வதில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்துடன், சிலர் எனக்கு அவதூறு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். எங்களது மருந்து, குழந்தைப்பேறு வாய்க்கப்பெறாத தம்பதியர் குழந்தைப்பேறு அடைவதற்குத்தான் உதவுகிறது. ஆண் குழந்தை என தீர்மானிப்பதில் எந்த பங்கும் ஆற்றுவதில்லை. எனவே, இந்த மருந்தின் பெயரை மாற்ற முடியாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த மருந்தை விற்பனை செய்ய மத்தியப்பிரதேசம் மாநில அரசு இன்று தடை விதித்துள்ளது. புத்ரஜீவக் பீஜ் என்ற பெயரை மாற்றும்வரை இதை கடைகளுக்கு சப்ளை செய்ய வேண்டாம் என வினியோகஸ்தர்களை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான அரசின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.