பாராளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள் : அனுரகுமார திசாநாயக!!

359

Anurakumara

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும். தேசிய அரசாங்கம் நாட்டுக்கு சாதகமான தீர்வு அல்ல. எனவே வெகு விரைவில் நாமும் பொதுத் தேர்தலை எதிர்ப்பார்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டியது அவசியமாகும். ஆனால் எதிர்வரும் பொதுத் தேர்தல் பழைய முறைப்படியே நடைபெறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் அக்கறை காட்டிவரும் நிலையில் அது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அரசாங்கத்தின் கால எல்லை வெறும் நூறு நாட்கள் மட்டுமேயாகும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளவுமே இவர்கள் தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக வாக்குக் கொடுத்தனர். இன்று நூறு நாட்கள் கடந்து விட்டன. இந் நிலையில் தொடர்ந்தும் பாராளுமன்றத்தை கலைக்காது தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறும் செயலாகும்.

அதேபோல் நூறு நாட்கள் ஆட்சிக்காகவே பிரதான கட்சிகள் தேசிய அரசாங்கத்துடன் கைகோர்த்தன. நாம் தேசிய அரசாங்கத்திற்கு உதவவும் இதுவே பிரதான காரணம். இந் நிலையில் பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்படவேண்டியதே சரியானது.

19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு பாராளுமன்றத்திற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்தி அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.

தொடர்ந்தும் மக்கள் பலம் இல்லாது ரணில் பிரதமராக இருக்க முடியாது. எனவே பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும். தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சி செய்வது நாட்டை வீழ்ச்சியின் பாதையில் கொண்டு செல்லும். தேவையை நிறைவேற்றும் வரையில் மட்டுமே தேசிய அரசாங்கம் அவசியம். அந்தத் தேவை இன்று நிறைவேறிவிட்டது.

எனவே உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். மேலும் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவதை நாம் ஆதரிக்கின்றோம். 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் 20ஆவது திருதச் சட்டமும் கொண்டுவரப்படுமென அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது. அதை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். ஆனால் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் உடனடியாக தீர்மானம் எடுக்க முடியாது.

புதிய தேர்தல் முறைமை சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளை பாதிக்காத வகையில் கொண்டுவரப்பட வேண்டும். இப்போது இருக்கும் விகிதாசார தேர்தல் முறைமையில் சிக்கல்கள் இருக்குமாயின் அவை தொடர்பில் ஆராயப்பட வேண்டும். அதே போல் சிறுபான்மை கட்சிகளுடன் பேசி உடன்பாட்டுக்கு வரவேண்டும்.

உடனடியாக தீர்மானம் எடுக்கப்படுவதனால் ஒரு சிலருக்கு மட்டுமே அது சாதகமாக அமையும். எனவே தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட்டாலும் இம்முறை தேர்தல் தற்போதிருக்கும் தேர்தல் முறைமைக்கு அமையவே நடைபெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.