வெளிநாட்டு உளவுப் பிரிவின் தகவலுக்கு அமைவாக வெளிநாடுகளில் ராஜபக் ஷ குடும்பத்தினரால் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் பெறுமதி 18 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். மேலும் இலங்கை நாணய மதிப்பீட்டின்படி 2.2 ட்றில்லியன் ரூபாவாகும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட தொகையானது ஊழியர்சேமலாப நிதியத்தின் சேமிப்பிலுள்ள தொகையின் பெறுமதியை விடவும் இருமடங்காகும். அத்தோடு இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் நான்கில் ஒரு பகுதியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ராஜபக் ஷ குடும்பத்தினரின் ஊழல் என்பது பாரிய மோசடியாகும். இதனை கண்டறிவதற்கு நான்கு நாடுகளின் உதவியை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் ஊடாக உலகின் அவதானத்தை இலங்கையின் மீது திசை திருப்ப எம்மால் முடிந்தது. ஜனவரி 8 ஆம் திகதி இலங்கை மக்களினால் அரசியல் புரட்சியொன்று செய்யப்பட்டது.
உலக நாடுகளின் பல விமர்சனத்திற்கு உள்ளான சர்வாதிகாரமிக்க குடும்ப ஆட்சியை இந்த தேர்தலின் ஊடாக எம்மால் தோற்கடிக்க முடிந்தது. இந்த புரட்சி எந்தவொரு அரசியல் கட்சிக்கும் கிடைத்த வெற்றியல்ல. மாறாக அரசியல் செயற்றிறன்மிக்க திட்டமிடலுக்கு கிடைக்கப்பெற்ற வெற்றியாகும்.
உலகில் தியுனிசியா,எகிப்து ஆகிய நாடுகளில் சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியாளர்களை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கு அரபு வசந்தம் என்ற பெயரில் மக்கள் வீதியில் இறங்கி உயிரையும் தியாகம் செய்து போராடினர். இந்த போராட்டங்களுக்கு துப்பாக்கி, கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பிரயோகித்தனர். எனினும் இலங்கையின் சர்வாதிகார போக்குடன் கூடிய கடந்த ஆட்சியை நீக்குவதற்கு இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக மக்களின் வாக்கினை கொண்டே இந்த வெற்றியை நாம் பெற்றுக்கொண்டோம்.
இதனை வெளிநாடுகளில் பாரிய அரசியல் புரட்சி என்றே போற்றுகின்றனர். இந்த புரட்சி ஜனநாயக முறையில் பெற்றுக்கொண்ட வெற்றியாகும். இலங்கையின் அரசியல் புரட்சி தொடர்பில் உலக நாடுகளிலுள்ள எழுத்தாளர்கள் நூல்கள் பல எழுத ஆரம்பித்துள்ளனர். உலக நாடுகளில் இடம்பெற்றதன் பிரகாரம் புரட்சிக்கு பின்பு புரட்சி ஏற்படுவது வழக்கமாகியுள்ளது. இதன்படி இலங்கையிலும் அரசியல் புரட்சிக்கு பின்பு மஹிந்த ராஜபக்ஷவின் அவதார புரட்சி தோன்றியுள்ளது.
இந்த பின்னணியில் ராஜபக்ஷ ஆட்சியை இல்லாமல் செய்த போதிலும் மீண்டும் அதன் அவதாரம் உருவெடுக்க தொடங்கியுள்ளது. மக்களினால் நிராகரிக்கப்பட்ட அராஜக ஆட்சியாளர்களை மீளவும் அரசியலுக்கு கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர்.
கடந்த ஆட்சியாளர்களினால் நாட்டு மக்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தின் பெறுமதி எல்லையில்லாதது. இதனை கணக்கிடுதற்கு கூட அதிகளவில் காலம் தேவை.
உலகில் சர்வதிகார போக்குடன் ஆட்சி நடத்திய பலர் வெளிநாடுகளில் பணங்களை பதுக்கி வைத்துள்ளனர்.
இவர்களினால் பதுக்கி வைக்கப்பட்ட பணத்தொகையில் ஒரு மடங்கு மாத்திரமே தற்போது வெ ளிநாட்டுஉளவு பிரிவினால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய லிபியாவில் சர்வதிகார ஆட்சிப்புரிந்த மொஹமட் கடாபியின் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் பெறுமதி அமெரிக்க டொலர் 80 பில்லியன் ஆகும்.
எனினும் அவர் இறந்து பல வருடங்களாகியும் வெ ளிநாடுகளில் அவரினால் பதுக்கி வைக்கப்பட்ட சொத்தில் 3.6 பில்லியன் டொலர் சொத்துக்களே இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அதேபோன்று எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதி 70 பில்லியன் டொலராகும்.
எனினும் அவர் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஐந்து வருடங்களாகியுள்ள நிலையில் இவரது சொத்துகளில் 800 மில்லியன் டொலர் மட்டுமே இதுவரைக்கும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எமது நாட்டின் முன்னைய ஆட்சிக்காலத்தின் போது மக்களின் பணம் பாரியளவில் மோசடி செய்யப்பட்டது.
இதன்படி வெளிநாட்டு உளவுப்பிரிவினர் மற்றும் சர்வதேச அமைப்புகள் எமக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் வெ ளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள முன்னைய ஆட்சியாளர்களி்ன சொத்துக்களின் பெறுமதியானது 18 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
மேலும் இலங்கையின் மதிப்பீட்டின்படி அதன் பெறுமதி 2.2 திரிலியன் ரூபாவாகும். எனினும் இதன் உண்மைத்தன்மையை நாம் பரிசீலனைசெய்து பாரக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தொகையானது ஊழியர் சேமலாப நிதியத்தின் சேமிப்பிலுள்ள தொகையை விடவும் இரு மடங்காகும். எமது நாட்டின் ஊழியர் சேமலாப நிதியத்தில் தற்போது வரைக்கும் 1.4 திரிலியன் ரூபாவே சேமிப்பில் உள்ளது. அத்தோடு இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் நான்கில் ஒரு பகுதியாகும். இவை சாதாரண மோசடி அல்ல. அப்பாவி மக்கின் பணமாகும்.
இது தொடர்பில் விசாரணை செய்வதற்கான வசதி இலங்கையில் இல்லை. ஊழல் மோசடிகளை கண்டறிவதற்கு நான்கு நாடுகளில் உதவியை நாம் கோரியுள்ளோம். மேற்படி குறித்த நாடுகள் விசாரணைக்கான தொழில்நுட்ப உதவிகளை எமக்கு வழங்க தயாராக உள்ளது.
-வீரகேசரி-






