
கொழும்பு பொரளை மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை தோன்றியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் சடலங்கள் கனமான பிளாஸ்டிக்கை பயன்படுத்தி மலர்ச்சாலைகளில் பதப்படுத்தப்படுவதால் சடலங்கள் உக்குவதற்கு 6 மாத காலம் எடுப்பதாலேயே இந் நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு மாதத்திற்கு 1300க்கும் மேற்பட்ட சடலங்கள் இங்கு அடக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு இந்து பெளத்தம் கிறிஸ்தவம் என மும்மதங்களைச் சேர்ந்தவர்களின் 30 சடலங்கள் இங்கு அடக்கம் செய்யப்படுவதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜெமுனி தெரிவித்துள்ளார்.
மலர்ச்சாலைகளில் பயன்படுத்தப்படும் பொலித்தீன் காரணமாக சடலங்கள் உக்கிப் போவதற்கு 6 மாதங்களுக்கு மேலாகிறது. எனவே தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென்றும் டாக்டர் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந் நிலை தொடருமானால் எதிர்காலத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே தற்போது பாவிக்கும் பொலித்தீனுக்கு பதிலாக விரைவில் உக்கிப் போகும் பொலித்தீனை சடலங்களை பதப்படுத்த பாவிக்குமாறு மலர்ச்சாலைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.





