தர்மம் வென்றது : தீர்ப்புக்குப் பின் ஜெயலலிதா!!

354

Jeyaa

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்நீதிமன்றத் தீர்ப்பால் தன் மீது சுமத்தப்பட்ட அவதூறு நீக்கப்பட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடகா மேல்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது. என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத் துடைத்திட்ட தீர்ப்பு இது. நான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை உறுதிசெய்த தீர்ப்பு இது. புடம் போட்ட தங்கமாக நான், மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.

இந்த தீர்ப்பு, எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை. நீதி நிலை நாட்டப்பட்டு, தர்மம் வென்றது என்பது தான் இந்த தீர்ப்பு.

சூழ்ச்சிகள் என்றைக்குமே தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனால், இறுதி வெற்றி என்பது தர்மத்திற்கும், நேர்மைக்கும் தான் கிடைக்கும்.

தி.மு.க.வினாரால் சூழ்ச்சிவலை பின்னப்பட்டு, அதன் காரணமாக என் மீது போடப்பட்ட வழக்கில், சதியும் விதியும் சதிராடியதால் இடையிலே நீதி உறங்கி விட்டது. இன்றைய தீர்ப்பு நீதியே என்றும் வெல்லும் என்பதை பறைசாற்றுகிறது.

நான் குற்றமற்றவர் என்பதில் எள் முனையளவும் நம்பிக்கை குலையாமல் எனக்காக பிரார்த்தனைகள் மேற்கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், அனைத்து தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே எப்போதும் எனது அவா ஆகும். தமிழக மக்களின் நலனே என் நலன் என்று நான் என்றென்றும் தமிழக மக்களுக்காகவே உழைத்திடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.