வவுனியாவில் மீண்டும் பதிவு நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் அச்சநிலை : குழப்பமடையத் தேவையில்லை என்கிறார் பிரதேச செயலாளர்!!

278

uthayarasa 85758454

வவுனியாவில் வீடுவீடாகச் சென்று விபரங்கள் திரட்டப்பட்டு வருவதுடன் புகைப்படங்களும் எடுக்கப்படுவதால் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நெருங்கும் வேளையில் இந் நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடுகளுக்கு செல்லும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அங்கு வசிக்கும் குடும்பங்கள் தொடர்பான விபரங்களைப் பெறுவதுடன் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், இறப்பு அத்தாட்சிப் பத்திரம், திருமணப் பதிவுச் சான்றிதழ், காணி உறுதி, கல்வித் தகமை, காணமல் போனோர் விபரம், யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் விபரம், வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் விபரம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை கோருவதுடன் அவற்றின் பிரதிகளையும் பெற்றுச் செல்வதுடன் வீடுகளை புகைப்படங்களும் பிடித்துச் செல்கின்றனர்.

யுத்த காலங்களில் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நெருங்கும் வேளையில் இவ்வாறான பதிவுகளை மேற்கொள்வது ஏன் என்ற ஒரு அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பிரல் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசாவிடம் தொடா்பு கொண்டபோது, பிரதேச செயலக பதிவுகளை சரியான முறையில் பேணுவதற்கும் அவற்றை கணணி மயப்படுத்துவதற்காகவும் புதிய விபரங்கள் திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் எமது பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்களுடைய விபரங்களை முழுமையாக ஆவணப்படுத்தும் நோக்கிலும் தேவை ஏற்படுகின்ற போது இலகுவில் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் இப் புதிய பதிவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எமது பிரிவிற்குட்பட்ட இறம்பைக்குளம், ஈச்சங்குளம், சாஸ்திரிகூளாங்குளம், ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் இதன் முற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆவணங்களை பிரதேச செயலகம் தமது தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தும். இது தொடர்பில் மக்கள் அச்சமோ அல்லது குழப்பமோ அடையத்தேவையில்லை எனதும் பதிவு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு தெவித்தார்.