கடும் மழையை அடுத்து பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பசறை பிபிலேகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பாறை சரிந்து வீழ்ந்த போது வீட்டுக்குள் இருந்த 2 பெண்களும், 8 மாத குழந்தையும் படுகாயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது 54 வயதான பெண்ணும், 8 மாத குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், 22 வயது பெண் தொடர்ந்தும் பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதால் மக்கள் மின்னல் தாக்கம் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.