
நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர்.
நோர்வேயில் ”Leadership Foundation” எனும் செயற்திட்டம் மூலம், சமூக, பண்பாட்டு, தொழில், கல்விசார் தளங்களில் தடம்பதித்து வருகின்ற தலைமைத்துவத் திறமைகளையுடைய, வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட 10 ஆளுமைகளை அடையாளப்படுத்தி விருது வழங்கப்பட்டு வருகின்றது.
வெளிநாட்டுச் சமூகங்களின் இளையவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குபவர்களை அடையாளப்படுத்துவது இவ்விருதின் நோக்கமாகும்.
இந்த அமைப்பு இவ்வாறாக கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வோராண்டும் இந்தத் தெரிவை மேற்கொண்டு வருகின்றது. பத்துப்பேரில் ஐவர் பெண்களும் ஐவர் ஆண்களுமாவர்.
குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியானவர்களை (Role Models) அறிமுகப்படுத்தி, அவர்களின் மேம்பாட்டுக்குரிய உந்துதலை வழங்குவதும் அவர்கள் மத்தியிலிருந்து தலைமைத்துவ ஆளுமைகளை வளர்த்தெடுப்பதும் இத்தெரிவின் மற்றுமோர் நோக்கமென்பது சுட்டிக்காட்டத்தக்கது.
ஆண்கள் பெரும்பான்மையாகவுள்ள துறையாக விளங்குகின்ற வாகனச் சாரதிப் பயிற்சி ஆசிரியராகத் தனக்கான தொழிற்துறையைத் தெரிவு செய்த மகா அவர்கள், தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் சாரதிப் பயிற்சி நிறுவனமொன்றினை நிறுவி கடந்த பல ஆண்டுகளாக நடாத்தி வருகின்றார்.
’Learn2Drive’ என்ற பெயரில் அவர் நடாத்திவரும் சாரதிப் பயிற்சி நிறுவனத்தினை அவரது தலைமைத்துவ மற்றும் நிர்வாக ஆளுமைத்திறன் மூலமாக வெற்றிகரமாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தற்பொழுது இயங்கிவரும் இவர் பல பயிற்சி ஆசிரியர்களைக் கொண்ட நிறுவனமாக அதனை வளர்த்தெடுத்துள்ளார். வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட முதலாவது பெண் சாரதிப் பயிற்சியாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இவரது பயிற்சி நிறுவனத்தினூடாக இதுவரை நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட பெண்கள் சாரதிச் சான்றுப்பத்திரம் பெற்றுள்ளனர். Top10 விருதுக்கு இவர் தெரிவானமை தொடர்பாக நடுவர் குழு குறிப்பிட்டுள்ளதாவது,
இயந்திர மயமான புலம்பெயர் வாழ்வியல் சூழலில் பெண்களின் சமூக இணைவாக்கத்திற்கு வாகனம் ஓட்டத் தெரிந்திருத்தல் இன்றியமையாத தேவையாகவுள்ளது.
இப்புறநிலையில் சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்த இவரது இப்பங்கு காத்திரமாக இருந்துள்ளது. அத்தோடு ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த இத்தொழிற்துறையில் தன்னை நிலைநிறுத்தி, வளர்த்துக் கொண்டமை முக்கியத்துவம் பெறுகின்றது.
ஏனைய வெளிநாட்டுப் பின்னணியுடைய பெண்கள், இளையவர்கள் மத்தியில் இவர் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கவர் என இவ்விருதுக்கான நடுவர் குழு இவரைத் தெரிவு செய்தமையை நியாயப்படுத்தியுள்ளது.
வாகன ஒட்டுதல் நடைமுறை, போக்குவரத்து விதிமுறைகள் சார்ந்த முன்னனுபவம் இல்லாத வெளிநாட்டுப் பின்னணியுடைய பெண்களுக்கு உகந்த முறையில் பயிற்சி முறைமைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளார் எனவும் நடுவர் குழு மேலும் தெரிவித்துள்ளது.
நோர்வேயிய தொழில், கல்வி, சமூக மற்றும் பண்பாட்டுத் தளங்களில் பல்லின மக்கள் பற்றிய புரிதலை வளர்த்தல், சகிப்புத்தன்மை மற்றும் இணைவாக்கத்தினை ஊக்குவித்தலும் இவ்விருதின் நோக்கங்களென்பது சுட்டிக்காட்டத்தக்கது.





