வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய மேலும் ஐவர் கைது!!

264

Vithiya

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையதாக நேற்று மாலை ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு 31 வயதும் இருவருக்கு 26 வயதும் ஒருவருக்கு 23 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த பொலிசார், அவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டனர்.

அவ்வேளை மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருகின்றனர் என்ற தகவல் அறிந்து ஊர்காவற்துறை, வேலணை மற்றும் புங்குடுதீவு மக்கள் குறிக்கட்டுவான் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்க கோரி போராட்டம் நடாத்தினர்.

அத்துடன் பொலிஸ் நிலையம் மீதும் கல்வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதில் இரு பொலிசாருக்கு சிறு காயம் ஏற்பட்டது அதனை அடுத்து பதட்டமான நிலை ஏற்பட்டது.

பொலிஸ் நிலையத்திற்கு மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன் கடற்படையும் வரவழைக்கப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சந்தேக நபர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல பொலிசார் முனைந்தனர்.

அதற்கு மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லாது சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்க கோரினார். அத்துடன் வீதிகளில் தடைகளை போட்டு ரயர்களை எரித்து போராட்டம் நடாத்தினார்.

அதனால் சந்தேக நபர்களை வீதி வழியாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் அவர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பாதுகாப்பு போதாமையால் சந்தேக நபர்களை பொலிசார் கடற்படையின் உதவியுடன் கடல் வழியகாக யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது யாழ். பொலிஸ் நிலையத்தில் அவர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இன்று நீதிமன்றில் முற்படுத்துவதற்காக நடவடிக்கையையும் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியான சிவலோகநாதன் வித்தியா (வயது 18) எனும் மாணவி கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.

அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கடந்த வியாழக்கிழமை காலை புங்குடுதீவை சேர்ந்த மூவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி அவர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந் நிலையில் ஊர்காவற்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று மாலை மேலும் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்தனர்.