புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து நேற்றுமுன்தினம் வவுனியாவில் அனைத்துப் பாடசாலை மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று வவுனியாவில் முழுநாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. பல்வேறு அமைப்புக்களும் அரச மற்றும் தனியார் ஊழியர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். முச்சக்கரவண்டிகளும்
பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டன. தனியார் பேரூந்துகள் இயங்கவில்லை.
ஆங்காங்கே வீதிகளில் டயர்கள் கொளுத்தப்பட்டு இளைஞர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். கலவரம் ஏற்பட்டால் தடுப்பதற்காக வவுனியா முழுவதும் கலகத் தடுப்புப் பொலிசார் நிறுத்தப்பட்டனர். நேற்று முழுவதும் வவுனியா எங்கும் பதற்ற நிலை காணப்பட்டது.
இன் நிலையில் நேற்று மாலை வவுனியா – யாழ்ப்பாணம் மற்றும் யாழ்ப்பாணம் -திருகோணமலை இடையே போக்குவரத்தில் ஈடுபட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பேரூந்துகள் மீது தாண்டிக்குளம் பகுதியில் வைத்து இனந்தெரியாத சிலர் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
5.30 மணியளவில் தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் யாழ்ப்பாணம் – வவுனியா இடையே சேவையில் ஈடுபட்ட பேரூந்து தாக்குதலுக்கு உள்ளானது.
தொடர்ந்து யாழ்ப்பாணம்- திருகோணமலை இடையே சேவையில் ஈடுபட்ட பேரூந்து சோயா வீதிப்பகுதியில் இரவு 7 மணியளவில் தாக்குதலுக்கு உள்ளானது.
இத் தாக்குதலில் சாரதி படுகாயமடைந்ததுடன், சாதுர்யமாக செயற்பட்ட சாரதி வீதியோரமாக பேரூந்தை நிறுத்தியதால் பேரூந்தில் இருந்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
கல்வீச்சுத் தாக்குதலில் பேரூந்துகளின் கண்ணாடிகள் நொருக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
-பாஸ்கரன் கதீசன்-






