மட்டக்களப்பில் இன்று (22.05) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுவரும் ஹர்தால் காரணமாக அந்தப் பகுதியின் இயல்பு நிலைமை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் காமவெறியர்கட்கு அதி உச்ச தண்டனை வழங்கக் கோரியும், குற்றவாளிகள் சார்பில் யாரும் வாதாடக்கூடாது எனவும் கோரியே இந்த ஹர்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இந்த ஹர்தால் காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட மாவட்டத்தின் புற நகர் பகுதிகளில் வியாபார ஸ்தாபனங்கள், பாடசாலைகள் அரச தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
வங்கிகள், பொதுச் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. புங்குடுதீவு மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் பதாதைகளும் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகரில் பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-நீலாகரன்-