பாட்டிகள் பற்றிய கதையாக வெளிவரவுள்ள இட்லி!!

496

download

பாட்டிகளுக்கும் கதைகளுக்கும் மரபுவழித் தொடர்பு உண்டு. நம் நாட்டுச் சூழலில் கதைகள் எல்லாமே பாட்டிகள் வழியேதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன.

இப்படி கதைகளுக்குப் பெயர் போனவர்கள் பாட்டிகள். அவர்களைப் பற்றிய கதைதான் ‘இட்லி’ என்னும் பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இட்லி என்பது ‘இன்பா ட்விங்கிள் லில்லி’ ஆகியவற்றின் சுருக்கம்.

இப்படத்தை ‘கதம்கதம்’ படத்தைத் தயாரித்த அப்பு மூவீஸ் தயாரிக்கிறது. வித்யாதரன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே சரத்குமார் நடித்த ‘வைத்தீஸ்வரன்’, கன்னடத்தில் உபேந்திரா நடித்த ‘நியூஸ்’ படங்களை இயக்கியவர். தரண் இசையமைக்கும் இப்படத்திற்கு கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தொழில்நுட்பம் தெரியாத 3 பாட்டிகள் இருக்கிறார்கள். அவர்களின் பேத்திக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அதிலிருந்து மீட்பதற்கு விபரீதமான முடிவை எடுக்கிறார்கள். இந்தக்கால தொழில்நுட்பத்தை அவர்கள் பாணியில் பயன்படுத்தி எப்படிக் காப்பாற்றுகிறார்கள் முடிவு என்ன என்பதே படத்தின் கதை.

அந்த 3 பாட்டிகளில் இன்பாவாக சரண்யாவும், ட்விங்கிளாக கோவை சரளாவும், லில்லியாக கல்பனாவும் நடிக்கிறார்கள். பேத்தியாக ‘சலீம்’ படத்தில் நடித்த அஸ்கிதா நடிக்கிறார். மேலும் ‘கத்தி’ அனுகிருஷ்ணா, மனோபாலா, சுவாமிநாதன், இமான் அண்ணாச்சி, லொள்ளுசபா மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நகைச்சுவைப் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு 6ம் திகதி தொடங்கி ஒரே கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.