முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கலை முன்னிட்டு இடம்பெற்ற தீர்த்தமெடுக்கும் நிகழ்வு!(படங்கள் வீடியோ)

482

b2670dc8a6f68dd99ff10f7428c2ec02

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று(25.05.2015) சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் .

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இந்த உற்சவத்தின் முன் நிகழ்வான தீர்த்தமெடுக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது

 தீர்த்தம் எடுக்கப்பட்டு காட்டு விநாயகர் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விளக்கேற்றப்படும். தொடர்ந்து ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து பண்டமெடுக்கப்பட்டு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை அடையும். மறுநாள் பொங்கல் உற்சவம் நடைபெறும் .

தீர்த்தமெடுத்தல் கிரியை 
அன்று இப்பகுதி மக்கள் விரத அனுட்டானங்களுடன் இருந்து பிற்பகல் ஒருமணியளவில் முள்ளியவளைக் காட்டுவிநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுக்கச் செல்லும் வைபவத்தில் கலந்து கொள்வர். பாக்குத்தெண்டியவரே தீர்த்தமெடுக்கும் வெங்கலப் பாத்திரத்தைச் சுமந்து செல்வர்.

தீர்த்தமெடுப்பவர் தன் வாயை வெள்ளைத் துணியால் கட்டியிருப்பர். சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கப்படும். தீர்த்தமெடுப்பவருக்கு உதவியாக இருவர் பணியாற்றுவர். குடலில் இறங்கி வாயூறு நீர்வரைக்கும் சென்று நிற்பர். பாத்திரத்தைத் தோளில் தாங்கி வைத்திருக்கும் போதே கடல் அலை வந்து மூடும் போது பாத்திரம் நீரால் நிறைந்துவிடும். நீர் நிறைந்த பாத்திரத்தை அங்குள்ள மடையில் வைத்துப் பூசனை புரிந்தபின் மாலை ஆறுமணியளவில் அங்கிருந்து புறப்படுவர்.

அப்பொழுது கடற்கரை மண் சிறிதளவு எடுத்துத் துணியில் முடிந்துகொண்டு இன்னொருவர் செல்லத் தீர்ததக்குடம் வரும் வழிநெடுகிலும் மக்கள் பந்தரிட்டு மாவிலைத் தோரணம் இட்டு, நிறைகுடம் வைத்து வரவேற்பர். இங்ஙனம் வரிசையதக வைக்கப்பட்ட நிறைகுடப் பந்தரில் தரித்து நின்று இறுதியில் இரவு ஒன்பது மணியளவில் காட்டுவிநாயகர் ஆலயத்துக்குத் தீர்த்தக்குடம் விநாயகர் ஆலயத்தை அடைந்ததும் அங்கு விசேட பூசை நடைபெறும். இத்தருணம் அடிக்கப்படும் ஆலயமணியின் ஓசையும் பறை ஒலியும் சேர்ந்து பரவி அப்பகுதி மக்களை மெயசிலிர்க்க வைக்கும். தீர்த்தக்குடத்தை விநாயகர் ஆலயத்திலுள்ள அம்மன் மண்டபத்தில் இறக்கி வைப்பர். இரவு 10மணியளவில் அம்மன் மண்டபத்தில் கும்பம் வைத்து (அம்மன் கும்பம்), மடை பரவி, ஒரு மட்பாத்திரத்தில், கொண்டுவரப்பட்ட உப்புநீரை நிரப்பி, அதனைக் கடற்கறை மண்மீது வைத்துத் திரியிட்டு விளக்கேற்றுவர். கடல்நீரில் விளக்கெரியும் அற்புதம் தொடர்ந்து ஏழு தினங்கள் காட்டுவிநாயகர் அம்மன் மண்டபத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும்.