வைகாசி நிலவு- வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை- வே.முல்லைத்தீபன்-!!

657


Vatraappalai

(எதிர்வரும் 01.06.2015 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை. மரபுகள்.. சம்பிரதாயங்கள் சிலவற்றைக் காணலாம்)



வைகாசி நிலவு
*********************
பாண்டிய மன்னனின்..
பிழையான தீர்ப்பினால்
மதுரையை எரித்துவிட்டு – தல
தரிசனங்களின்
தொடர்ச்சியாய்
பத்தாவது இடத்தில்
பக்குவமாய் வந்தமர்ந்ததால்..

பத்தாப்பளையென்று நந்திக்கடலோரம்
பெயரெடுத்தது – எங்கள்
கற்புக்கரசி கண்ணகிக்கு
கோயிலுங் கண்டது.
நந்திக்கடலோரத்தில்
தண்ணியெடுத்துப் பொங்கிநின்ற
தனையனிடம் – தலைகடிக்கிறது
ஓர்தடவை பார்மகனே என்றாளாம்.
பார்த்தவன்..
பதறியடித்து விழி பிதுங்கி நின்றானாம்.
தலையெல்லாம் ஆயிரங் கண்கள்.
அதனால்த்தானே நாம்….



கண்கள் கொண்ட மண்பானையில்
கற்புரம் ஏற்றுகிறோம் – எம்
சீமாட்டி திருவருளால்
திருக்கோவிலும் அமைத்துள்ளோம்.
ஆரம்பத்தில்…
மடாலயமிது – இன்று
குருக்கள் முறைகொண்டு
கோபுர வாசலுடன்
வானுயர்ந்து நிற்கிறது
வாழ வழி தருகிறது.
ஆண்டு தோறும்
தொடர்ந்து வரும்
பங்குனித்திங்கள்களில்..



எண்ணில்லா மணிகளுடன்
மஞ்சத்தின் மீதேறி
பவனியுலா வருகிறாள்
பார் காத்து நிற்கிறாள்.
வருடா வருடம் கண்ணகிக்கு
வைகாசி விசாகத்தில்
வளர்ந்து நேர்ந்த திருக்குளிர்த்தி.
வைகாசி மாத இதமான காற்றுடன்
நளினம் பாடும் நந்திக்கடலின் ஓசையுடன்
மானிடத்து மேன் மகளுக்கு
மகத்தான திருக்குளிர்த்தி.
எங்குமில்லா..
உண்மையொன்று
இங்குள்ளது.


வைகாசியில் வரும்
ஓர் திங்கள்..
பாக்குத் தெண்டலெடுத்து,
மறு திங்கள்..
பெருங்கடல்த் தீர்த்தமெடுத்து,
காட்டா வினாயகரில் – ஏழு
நாட்கள் காத்திருந்து,
விசாகத்திங்களன்று…
உலகிற்கே ஒளி கொடுக்கும்
உப்பு நீர்த்தீபம்
பக்குவமாய் எரிகிறது
பத்தாப்பளையில் எரிகிறது.
முழுக்குடம் எடுத்தாலென்ன..
அரைக்குடம் எடுத்தாலென்ன..
எடுத்த குடம் எரிகிறது..
திருக்குளிர்த்தி முடியும் வரை.
இவளுக்கென்றொரு கூத்தும்
இருக்கிறது எம்மவரிடம்..

கண்ணகி நாடகம்
கண்ணகி வழக்குரை
சிலப்பதிகாரம் – என்றெல்லாம்
சொல்லப்படும்..
கோவலன் கண்ணகி கதை
ஈரடி, மூவடி..
வட மோடி, தென் மோடி – பாங்கின்றி
” முல்லை மோடி” எனும்
மான்புப் பெயர்தாங்கி..
தனித்துவமாய் தரணியிலே
அம்மனிவள் முற்றத்திலே
பத்துக்கம்பம் கொண்ட வெள்ளைகட்டி
வட்டக்களரி அமைத்து
தீப்பந்த வெளிச்சத்தில்
நேர்த்தி வைத்து
பொங்கல் முடித்து
”கோவலன் நாட்டுக் கூத்து” எனும் வடிவில்
ஆடப்பட்டு வருகிறது – பழைமை
பேணப்பட்டும் வருகிறது.


நீதிக்காய் கோபங்கொண்டு
மதுரையை எரித்தவள்
எம்மையும் விடுகிறாளா..?
திருக்குளிர்த்தி
திருப்தி அளிக்காவிடில்
சின்னம்மை பெரியம்மையென்று
அக்கினியை எம் மீது
அள்ளி வீசுகிறாள்.
அசைவம் விலக்கி
வேப்பிலை தடவி
நேர்த்தி வைத்து
வேண்டிக் கொண்டால்
வேதனை தராது
விலகியே போயிடுவாள்.
உலகினில்
இதுவுமோர்
அற்புதம்.
பத்தாப்பளை
பக்தியின்
உறைவிடம்.

– வே.முல்லைத்தீபன்-