புங்குடுதீவு மாணவி படுகொலை சந்தேக நபர்கள் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!!

579

புங்குடுதீவு பாடசாலை மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 9 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவர்களின் மரபணு பரிசோதனை தொடர்பிலும் ஆராய்ந்துள்ளது.

மேலும் சுவிஸ் பிரஜை கொழும்பிற்கு தப்பிச் சென்றமை குறித்தும் விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இவர்கள் ஆஜர் செய்யப்பட்டமை தொடர்ந்து நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, புங்குடு தீவு மாணவியின் குடும்பத்தினர் சர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா உள்ளிட்ட 6 சட்டத்தரணிகள் கொண்ட குழுவினர் முன்னிலையாகினர்.

இந்த வழக்கு விசாரணைகளை காலதாமதம் செய்யாமல் முடிக்கவேண்டும் என மாணவி தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

வித்தியா படுகொலை செய்யப்பட் இடத்திலிருந்து மீட்கப்பட்ட தடயப் பொருள்களையும் பிரேத பரிசோதனை மூலம் பெறப்பட்ட தகவல்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கும்படி நீதிவான் இதன்போது தெரிவித்தார்.

சந்தேக நபர்களின் ரத்த மாதிரிகளை சிறைச்சாலை ஆணையாளர் ஊடாகப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படியும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களின் கைத்தொலைபேசி அழைப்புக்களையும் அதில் பதிவாகியுள்ள ஏனைய தகவல்களையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு உத்தரவிட்டார்.

மக்களால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர் எவ்வாறு வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து சட்டத்தரணி தவராசா கேள்வியெழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 12 13 14