புத்தளம் பகுதியில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் நேற்று பொது மக்களால் நையப்புடைத்து கடும் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் பொலிஸார் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்த போது எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் சிறுமி குறித்த நபரால் நேற்று கடத்திச் செல்லப்பட்டார்.
கடத்தப்பட்ட சிறுமி காட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொது மக்கள், பொலிஸாரின் தேடுதலின் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
சிறுமியை கடத்திச் சென்று காட்டுக்குள் பதுங்கியிருந்த சந்தேகநபர் பொது மக்களிடம் வசமாக மாட்டிக் கொண்டதை அடுத்து கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்.
சந்தேகநபர் சிறுமியை தந்திரமாக ஏமாற்றி தில்லையடி வேலாங்கன்னி தேவாலயத்திற்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி காட்டிற்குள் இருந்து அழும் சத்தம் கேட்டுள்ளது. அழுகை சத்தம் கேட்ட திசையை நோக்கி பிரதேச வாசிகள் சென்ற போது சிறுமி அவர்களை நோக்கி ஓடி வந்துள்ளார்.
சிறுமியை தாயுடன் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி விட்டு, பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து காட்டில் தேடுதலை மேற்கொண்டனர். கடும் முயற்சிக்கு பின்னர் சிறுமியை கடத்திச் சென்ற நபரை நையப்புடைத்தனர்.
சிறுமி பொலிஸ் விசாரணையின் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.









