வவுனியா மாவட்ட புகையிரத கடவைகளின் தற்காலிக பாதுகாப்பு ஊழியர்களாக கடமையாற்றுபவர்கள், தமது நிரந்தர நியமனம் மற்றும் சம்பள உயர்வு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாக தொடர்கின்றது.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட புகையிரத காப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜெ.றொஹான் கருத்து தெரிவிக்கையில்,
புகையிரத சேவை விஸ்தரிக்கப்பட்ட போது ஆறு மாத காலப்பகுதிக்குள் எம்மை நிரந்தரமாக்குவதாக தெரிவித்து பொலிஸாரால் நாம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டோம்.
ஆனால் மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் எமக்கு நிரந்தர நியமனம் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 150 ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது. மாதம் 31 நாட்களும் வேலை செய்யும் எங்களுக்கு சுகயீன விடுமுறைகூட வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் மாத்திரமன்றி, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் தற்காலிக புகையிரத கடவை ஊழியர்களாக கடமையாற்றுபவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 75 பேர் தற்காலிக புகையிரத பாதுகாப்பு ஊழியர்களாக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-பாஸ்கரன் கதீசன்-






