வவுனியா பரசங்குளம்- புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள திவிநெகும பயிற்சி நிலையத்தில் கடந்த 2011ஆண்டிலிருந்து 17பேர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். தற்போது புதிய அரசாங்கம் திவிநெகும செயற்திட்டத்தில் பணியாற்றுபவர்களை வேறு திணைக்களங்களுக்கு கைமாற்றும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்கின்றது.
கடந்த மாதம் அமைச்சின் அலுவலகத்திலிருந்து அனுப்பியுள்ள கடிதத்தில் யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரிலிருக்கும் பீடாதிபதி திருமதி.சிவச்சந்திரன் அவர்களை விவசாய பீடத்திற்கு இக்கட்டிடத்தினை பொறுப்பேற்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கும் போது, இப்பணியாளர்கள் தொடர்பாக கவனம் எடுப்பதாகவும் 3மாத கால அவகாசம் கோரியபோதும் 17 பணியாளர்களும் இவரின் இக் கருத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
எனவே இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு நியமனம் வழங்கப்படாததையிட்டு இப்பணியாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதனால் சில தினங்களில் போராட்டத்தில் இறங்கவுள்ளதாகவும் அப் போராட்டத்தில் நியாயம் கிடைக்காதபட்சத்தில் குடும்பத்தின் வறுமை காரணமாக தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
அத்துடன் இங்கு கட்டப்பட்ட திணைக்களம் தனியார் காணியில் அமைந்துள்ளது. இக்காணியின் உரிமையாளர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் தான் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் 2011ஆம் ஆண்டில் தான் இங்கு வந்து பார்வையிட்டதும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தனக்கு அரசியல் அழுத்தம் இருந்ததால் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் திரும்பி சென்றுவிட்டதாகவும் தற்போது புதிய அரசாங்கம் அமைந்துள்ளதாகவும் தனது இக்காணியினை திரும்பப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கையினை நாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயற்திட்ட கட்டடங்களை வேறு நிறுவனங்களுக்கு கையளிக்கும்போது செயற்திட்ட ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியே.
-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-






