ஏழைகளுக்கு உணவளித்து, நடமாடும் மர வீடும் கட்டித்தரும் 9 வயதுச் சிறுமி!!

528

Girl

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரைச் சேர்ந்த ஹெய்லி ஃபோர்ட் என்னும் சிறுமி தனது ஐந்தாவது வயதில் வீதியோரத்தில் கிடந்த ஒரு ஏழை முதியவரை கண்டதும் அவருக்கு நாம் என்ன செய்யலாம்? என கவலையுடன் தனது பெற்றோரிடம் கேட்டார். இதையடுத்து, அவரது பெற்றோரும் அந்த முதியவருக்கு கடையில் இருந்து உணவு வாங்கித்தந்து உதவி செய்தனர்.

இதையடுத்து, பசியால் வாடியிருந்த அந்த முதியவரின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை கண்டு பூரித்துப்போன ஹெய்லி ஃபோர்ட், தனது ஆறாவது வயதிலிருந்து வீட்டிக்கு அண்மையில் உள்ள தோட்டத்தில் கரட், அவரைக்காய், பீன்ஸ், தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளையும், இதர பழவகைகளையும் விளையவைத்து, கடந்த மூன்றாண்டுகளாக வொஷிங்டனில் உள்ள ஏழைகளுக்கான உணவு வங்கிக்கு தானமாக வழங்கி வருகிறார்.

அடுத்தகட்டமாக, வேலையின்றி வீதியோரங்களில் வசிக்கும் ஏழை எளியவர்கள் மனு செய்து, வேலை வாய்ப்பு பெற உதவும் வகையில் உள்ளூர் தபால் நிலையத்தில் 10 தபால் பெட்டிகளை வாடகைக்கு எடுத்து தந்துள்ள இந்த ஒன்பது வயது வள்ளல்,சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து, தற்போது வேலையும் பறிபோய், வீடற்று தவிக்கும் எட்வர்ட் என்பவருக்கு தனது பாட்டி மற்றும் தாயாரின் மேற்பார்வையில் இவராகவே உருவாக்கிய நடமாடும் மர வீட்டை பரிசாக அளித்து அசத்தியுள்ளார்.

இதற்காக, உள்ளூர் வாசிகளிடம் இருந்து நிதி திரட்டி போக்கிடமற்ற மேலும் பலருக்கு புதிய மர வீடுகளை உருவாக்கி தருவதே எனது அடுத்த இலட்சியம் என பால்மணம் மாறாத புன்னகையுடன் கூறுகிறார், ஹெய்லி ஃபோர்ட்.