வவுனியாவிலிருந்து சவுதி சென்ற பெண் மரணம் : கால்கள் பாதிக்கப்பட்ட கணவன் உட்பட குடும்பத்தினர் கண்ணீர்!!(படங்கள், காணொளி)

943

வீட்டின் வறுமை, பிள்ளைகளின் கல்வி, குடும்ப பொருளாதாரத்தின் கீழ் நிலை என்பன பெண்கள் மனதை அதிகம் பாதித்துகொள்வதன் விளைவே பணிபெண்களாக குடும்பத்தை விட்டு, குழந்தைகளை விட்டு அந்நிய தேசத்தில் அந்நிய செலவாணி தேடிய பயணத்தை நம் நாட்டு பெண்கள் மேற்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

இவ்வாறாக குவைத், சவுதி, கட்டார், பர்கேய்ன் என்று பல நாடுகளுக்கு செல்லும் பெண்கள் தினம் தினம் அனுபவிக்கும் வேதனைகள் பல.

அந்தவகையிலேயே வவுனியா செட்டிகுளம் காந்திநகர் கிராமத்தை சேர்ந்த 44 வயதான நாகசந்திரராசா ஜெயராஞ்சினிக்கும் இடம்பெற்றுள்ளது வேதனைகள் மட்டுமே.

கால்கள் பாதிக்கப்பட்ட கணவன் உட்பட 4 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த ஜெயரஞ்சினி, வீட்டின் வறுமை காரணமாக பல கனவுகளை சுமந்துகொண்டு 2013 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் சவுதி அரேபியாவிற்கு சென்றார்.

பின்னர் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சடலம் இன்று வரை இலங்கைக்கு அனுப்பப்படவில்லை. இதனால் இக் கிராம மக்களும் உறவினர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

900 ரியால் சம்பளம் தருவதாகக்கூறி அழைக்கப்பட்ட ஜெயரஞ்சினி, 750 ரியால்கள் மர்திரமே சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக அவரது கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் 2014 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் தொடர்புகொண்ட போதிலும் எந்தவித பலனும் இல்லாத நிலையில் மனைவியின் சம்பளப் பணம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 14 மற்றும் 30 ஆம் திகதிகளில் தொலைபேசியில் தொடர்புகொண்ட மனைவி வேலைப்பளு அதிகரித்துள்ளதாகவும் தன்னால் வேலை செய்ய முடியாதுள்ளமையினால் நாட்டுக்கு திருப்பி அழைக்குமாறும் கணவனிடம் கேட்க மீண்டும் கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை நாடியுள்ளார்.

எனினும் அன்றிலிருந்து மனைவியை மீட்கும் போராட்டத்தில் குதித்த கணவன், மனைவி பணியாற்றிய வீட்டு பெண்மணியுடனும் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனைவியை நாட்டுக்கு அனுப்புமாறு கோரியுள்ளார்.

எனினும் 5ஆம் திகதி 6 ஆம் மாதம் 2015 ஆம் ஆண்டு மாலை 2.30 அளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து வீட்டுக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஜெயரஞ்சினி இறந்துவிட்டார் என்பதாக இருந்தது.

இந்தநிலையில் சடலத்தை பெறுவற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தை நாடிய அக்குடும்பத்திற்கு சடலமும் 3 மாதங்கள் கழித்தே கிடைக்கும் என்ற பெரிய ஏமாற்றம் நிறைந்த செய்தியே மிஞ்சியுள்ளது.

இது தொடர்பாக வவுனியா நெற் இணையத்திற்கு தெரிவித்த இறந்த பெண்ணின் கணவர், தனது மனைவியின் மரணத்தில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் எனவே தான் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாகவும், தனது மனைவியின் சடலத்தையாவது இலங்கைக்கு விரைவாக கொண்டு வருவதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பல கனவுகளோடு வீட்டின் வறுமையை எண்ணி அந்நிய தேசம் சென்ற ஜெயரஞ்சினி இறந்து விட்டதாக வந்த செய்தி அந்த குடும்பத்தை மாத்திரமல்ல காந்திநகர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

-பாஸ்கரன் கதீசன்-

1 2 3 4 5 6 7 8