சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : இருவர் கைது!!

576

Abuse

15 வயதுடைய சிறுமியை அவ்வப்போது பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இருவரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கதெனிய வீரக்குமந்தளுவ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுள் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் சகோதரியின் கணவர் எனவும் மற்றைய சந்தேக நபர் சிறுமியின் உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிறுமியின் தாயும் தந்தையும் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதோடு சிறுமியின் சகோதரியும் திருமணமாகி தனியாக வாழ்ந்து வரும் நிலையில் சிறுமி அவர்களது உறவினரின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இச்சிறுமி பிரதேச பாடசாலை ஒன்றில் பத்தாம் வகுப்பில் கல்வி பயின்று வருகிறார். தான் தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்ற வேளை தன்னை முதலில் தனது மைத்துனர் கடந்த ஆகஸ்ட் மாதம் தினம் ஒன்றில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் அதன் பின்னர் பல தடவைகள் தன்னை அவர் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி தனது உறுவினரான மற்றைய சந்தேக நபரும் தன்னை பலவந்தமான முறையில் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் சிறுமி பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கும் சிறுமியின் மைத்துனருக்கும் இடையில் இருந்த கள்ளத் தொடர்பினை அறிந்து கொண்டுள்ள இரண்டாவது சந்தேக நபர் சிறுமியை பயமுறுத்தி இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறுமியின் தாய் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளதோடு தனது மகளுக்கு ஏற்பட்டுள்ள அநியாயத்தை அறிந்து கொண்டு மகளிடம் விசாரித்த போது அச்சிறுமி தனக்கு நேர்ந்த சகல விடயங்களையும் தாயிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் தனது மகளுடன் சிலாபம் பொலிஸ் நிலையம் சென்றுள்ள தாய் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபர்களான இருவரையும் கைது செய்துள்ளனர்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலாபம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.