
அகுணகொலபெலெஸ்ஸ தண்ணீர் போத்தல் வழக்கு மற்றும் டி.பி.உபுல் வெளியிட்ட கருத்து ஆகிய விடயங்கள் குறித்து, இரகசிய பொலிஸாரால் இன்று தன்னிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்த போது, ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தாம் அரசியலே செய்ததாகவும் எந்தவொரு தவறும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்ட நாமல், தமது குடும்பத்துக்கு மாத்திரமன்றி பிரதேச அரசியல்வாதிகள் மீதும் குற்றம் சுமத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் நீதிமன்றத்தில் நியாயத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் நிரபராதி, குற்றம் இழைக்கவில்லை எனவும் நாமல் ராஜபக்ஷ இதன்போது மேலும் கூறினார்.
அங்குனகொலபெலஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்தில், நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவர், ஆயுதத்துடன் வந்த சம்பவம் மற்றும் தென் மாகாண சபை உறுப்பினர் டி.வி உபுல், நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவின் அதிகாரிகளை கல்லெறிந்து கொலை செய்வதாக கூறியமை ஆகியன தொடர்பில் நாமலிடம் இன்று வாக்குமூலம் பெற்றுகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





