
வவுனியாவிலும் இன்புலுவன்சா நோய்த் தாக்கம் உள்ளமையினால் மக்கள் அவதானத்துடன் இருத்தல் வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் இறந்தமை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த நிலையில் உண்மை நிலையினை அறியும் பொருட்டு அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்..
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் இருந்து கர்ப்பிணிப் பொண்ணொருவர் வைத்திய நிபுணர் இன்மை காரணமாக வ வுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்படும் போதே ஆபத்தான நிலையை எட்டியிருந்தார்.
எனினும் நாம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தபோதிலும் இன்புளுவன்சா எச்1என்1 வைரஸ் தாக்கத்திற்கு அப் பெண் உள்ளாகியிருந்தமையினாலும் 48 மணிநேரம் கடந்திருந்தமையினாலும் எமது சிகிச்சைகள் பலனளிக்கவில்லை.
இவ் வைரஸ் கர்ப்பிணிப் பெண்களுக்கும் சலரோக நோயாளிகளுக்கும் தாக்குமாயின் ஆபத்தானது. அத்துடன் இன் நோய்க்காண காரணங்களாக தொண்டை கரகரப்பு, முகம் சிவந்து காணப்படும். நீர் போன்ற திரவம் மூக்கால் வடியும், சுவாசிப்பதற்கு சிரமப்படுதல் போன்ற நோய்க்கான காரணிகள் காணப்படும் பட்சத்திலும் ஏதேனும் சுகயீனம் ஏற்படும் பட்சத்திலும் உடனடியாக அரச வைத்தியசாலையை நாடி சிகிச்சை பெறுவது சிறந்தது.
அவ்வாறு சிகிச்சை பெறத் தவறும் பட்சத்தில் 24 மணிநேரத்தில் இதன் தாக்கம் அதிகரித்து சுவாசப்பகுதி சேதமடைவதுடன் 48 மணிநேரத்தின் பின்னர் ஆபத்தான நிலைக்கு செல்ல நேரிடும்.
வவுனியாவிலும் இவ் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதனால் மக்கள் இந் நோய்த்தாக்கம் தொடர்பில் மிக அவதானத்துடன் இருப்பது அவசியமானதாகும் எனத் தெரிவித்தார்.
-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-





