வவுனியா மாவட்டத்தினதும், வன்னிப் பிரதேசத்தினதும் முன்னோடிக் கவிஞராகிய வன்னியூர்க் கவிராயருக்கு அவருடைய சொந்த ஊராகிய செட்டிகுளம் இலுப்பைக்குளத்தில் சிலைவடித்து நிறுவி அவருடைய இலக்கியப் பதிவுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். இன் நிகழ்வு நேற்று (20.06.2015) நடைபெற்றது.
இன் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், முன்னோடி இலக்கியவாதிகள், புகழ்பூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.
வன்னியூர்க் கவிராயரின் கவிதைகள், சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கள், அவரைப்பற்றிய பல்வேறு பார்வை கொண்ட பதிவுகளான கட்டுரைத் தொகுப்புக்கள் அடங்கிய விழா மலர் என்பன வைபவரீதியாக வெளியிட்டு வைக்கப்பட்டன.
இந்த வெளியீடுகளின் முதற் பிரதி சிறப்புப் பிரதி என்பனவும் விருந்தினர்களால் முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டது. இலக்கிய உலகில் இலைமறைகாயாக இருந்து தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்து வன்னி மண்ணுக்குப் பெருமை சேர்த்த பெருமகனாகிய வன்னியூர்க்கவிராயருக்கு வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கிய பேரவையினர் பெரிய அளவில் விழா எடுத்து, அவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
-வவுனியா நெற் பிராந்திய செய்தியாளர்-





