பாகிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி!!

455

pak

கயானாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 37 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன்படி கடந்த 14ம் திகதி இடம்பெற்ற முதல் போட்டியில், அப்ரிடியின் சிறப்பான ஆட்டத்தால் 126 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது பாகிஸ்தான் அணி.

இந்தப் போட்டியில் அப்ரிடி 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு ஏழு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

இந்தநிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற 2வது போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைக் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் துடுப்பாட்டத்தில் டேரன் பிராவோ 54 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

233 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சார்பில் நசீர் ஜாம்ஷெட் 54 ஓட்டங்களையும், உமர் அக்மல் 50 ஓட்டங்களையும் விலாசினர்.

முதல் போட்டியில் அசத்தியதால் அப்ரிடி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் வெளியேறினார்.

இறுதியாக 47.5 ஓவர்களில் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுக்க வெற்றி மேற்கிந்திய தீவுகள் வசமானது.

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி, மேற்கிந்திய தீவுகளின் வெற்றிக்கு வழிவகுத்த சுனில் நரைன் சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்படி ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.