சட்டங்கள் உருவாக்கப்படுவது மனிதர்களைப் பாதுகாப்பதற்காகவே. அதனை புரிந்துகொள்ளாத நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகச் சாதாரணமாக சட்டங்களை மீறிச் செயற்படுகின்றோம்
இலங்கையில் போக்குவரத்துத்துறையில் மக்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு இறுக்கமான சட்டங்கள் இருந்தபோதிலும் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்டங்களை மீறிச் செயற்பட்டு தமக்குத் தாமே ஆபத்தைத் தேடிக்கொள்கின்றனர்.
நாடெங்கிலும் விபத்துக்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக வவுனியாவில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையை எமது செய்திகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
வவுனியாவில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும் முடியும் நேரத்திலும் பெற்றோர் பிள்ளைகளை தலைக்கவசம் அணியாமல் மோட்டர் சைக்கிளில் அழைத்துச் செல்வதும், பொலிசார் கண்டும் காணாததுபோல் விடுவதும் நடைபெற்று வருகின்றது.
பெற்றோர்களைக் கேட்டால் ”பாடசாலை சீருடையில் போனால் பொலிசார் மறிக்க மாட்டார்களாம்’. இதனைக் கூறும் பெற்றோர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் தலைக்கவசம் அணியவேண்டியது சட்டத்திற்காக அல்ல உங்கள் பாதுகாப்பிற்காகவே.
ஒரு நாளில் வவுனியாவில் ஒரு பாடசாலையில் பாடசாலை முடியும் நேரத்தில் மட்டும் கிட்டதட்ட நூற்றுக்கணக்கானோர் மோட்டார் சைக்கில்களில் தலைக்கவசம் இன்றி பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றார்கள். இதனை பொலிசாரும் அனுமதிக்கின்றனர்.
இலங்கையில் நடைபெறும் அதிகமான விபத்துக்களில் தலைக்கவசம் இன்றி அல்லது தலைக்கவசத்தினை முறையாக அணியாததாலேயே பல உயிர்கள் பலியாகின்றன. பெற்றோர்களே உங்கள் அசண்டையீனதால் பிள்ளைகளை பலியாக்கி விடாதீர்கள் விபத்து என்பது எல்லோருக்கும் பொதுவானது.
-ஸ்ரீ அருணன்-