
புதிய தேர்தல் முறையானது யாழ். மாவட்டத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ எண்ணிக்கை ஒன்பது என்ற அடிப்படையில் நிலைபெறும் வகையிலும் அதே நேரம் வடக்கு, – கிழக்குக்கு வெளியிலும் தமிழ் மக்களின் வாக்குகள் பெறுமதி மிக்கதாகவும் அர்த்த புஷ்டியுடையதாகவும் இருக்கும் வகையிலும் அமைய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். சம்பந்தன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
புதிய தேர்தல் முறைமையானது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய தேவைப்பாடு கொண்டதாக இருக்கிறது. நாட்டினதும், மக்களினதும் ஜனநாயக வாக்குரிமை வாக்களிப்பு ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டியுள்ளது.
நாட்டு மக்களால் அளிக்கப்படுகின்ற வாக்குகள் பயனுள்ளவையாக அமைந்திருக்கின்றன என்பதை அவர்கள் உணர்வு பூர்வமாக ஏற்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்நிலைமை புதிய முறைமையில் உள்வாங்கப்படுதல் அவசியமாகும்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற அதேவேளை அப்பகுதிகளுக்கு வெளியில் மலையகத்திலும் ஏனைய பகுதிகளிலும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பரந்து வாழ்கின்றனர்.
ஆகவே இவ்வாறு பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களாலும் முஸ்லிம் மக்களாலும் வழங்கப்படுகின்ற வாக்குகள் அர்த்தப்புஷ்டியானவையாக இருப்பதற்கு தேர்தல் முறைமையை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் கலப்பு முறை தேர்தல் முறைமையின் மூலம் வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய முறை அமைய வேண்டும்.
வடக்கு, கிழக்கில் இன்று வாக்காளர்களின் எண்ணிக்கை பெரிதும் வீழ்ச்சிக்கண்டுள்ளது. அசாதாரண சூழல் காரணமாக அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது அவர்களால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது கிடையாது. அதிகமானோர் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் ஒரு தொகையினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இடம்பெயர்ந்த புலம்பெயர்ந்த சகலரும் இந்நாட்டுப் பிரஜைகளே என்று சொல்லிக்கொண்டாலும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்படாதவர்களாகவே இருக்கின்றனர். இவ்வாறு வாக்காளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதால் யாழ் மாவட்டத்தின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையும் வீழ்ச்சியடைகின்றது.
எனவே புதிய தேர்தல் முறைமையானது யாழ் மாவட்டத்தின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படாதவாறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரதிநிதித்துவப் பாதகங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்படுதல் அவசியம் என்பதை வலியுறுத்துகின்றேன்.
யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் அங்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்துவதற்கென ஒன்பது ஆசனங்கள் இருத்தல் வேண்டும் என்ற யோசனை புதிய முறையில் உள்ளடக்கப்படுதல் வேண்டும் என்பதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தினேஷ் குணவர்த்தன எம்.பி. மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் என சகலரும் கொண்டுள்ளனர்.
எனவே யாழ் மாவட்ட மக்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதுடன் இனியும் 20 வருடங்களுக்கேனும் யாழ் மாவட்ட எம்.பிக்களின் எண்ணிக்கையை ஒன்பதாக பேனுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்றார்.





