வவுனியா அரச அதிபரை இடம்மாற்ற பிரதமர் உறுதி வழங்கினார் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!!

467

TNA

வவுனியா மாவட்டச் செயலரை இடமாற்றம் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார் என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று தெரிவித்தனர்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், அந்த வளாகத்தில் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தினர்.

இதன்போது வவுனியா மாவட்டச் செயலருக்கு எதிராக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் போர்க் கொடி தூக்கியுள்ள விவகாரம் குறித்து பிரதமருக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் எடுத்து விளக்கினர்.

வவுனியா மாவட்டச் செயலர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறினார் என்று குற்றஞ்சாட்டி, வடக்கு மாகாண சபையில் கடந்த 3மாதங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அந்தத் தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தும்,வவுனியா மாவட்ட அரச
அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரியும்,வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடாத்தியிருந்தனர்.இதன் காரணமாக சபை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்தி விடயம் தொடர்பில் உடனடியாக கடிதம் மூலம் பிரதமருக்கு நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தியிருந்தனர்.
இதனடிப்படையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் பிரதமருடன் நேற்று சந்திப்பு இடம்பெற்றது.