
வல்வட்டித்துறையில் ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் காணாமற்போன வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் கொழும்பு கொம்பனித் தெருவில் மீட்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வல்வெட்டித்துறை பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த எஸ்.விஷ்ணுராஜா (வயது 15), கம்பர்மலையைச் சேர்ந்த இ.தர்ஷன் (வயது 16), வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பா.சுகிர்தன் (வயது 15) ஆகிய 3 சிறுவர்களும் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் உறவினர் ஒருவரின் பிறந்ததின நிகழ்வுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர்கள் அங்கு செல்லாத நிலையில் உறவினர்களால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொம்பனித் தெருவில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்குச் நேற்று முன்தினம் சென்ற மூவரும் தங்களுக்கு வேலை தருமாறு கோரியுள்ளனர். குறித்த மூவர் மீதும் சந்தேகம் கொண்ட ஹோட்டல் உரிமையாளர், சிறுவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி இலக்கத்தை பெற்று, தகவல் வழங்கியுள்ளார்.
அத்துடன், கொம்பனித் தெரு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சிறுவர்களை மீட்ட பொலிஸார் அவர்களை அன்றிரவு அவர்களது உறவினர்களுடன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வல்வெட்டித்துறைப் பொலிஸார் சிறுவர்களை பொறுப்பேற்றுக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் பின்னர் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலி ஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





