
வட, கிழக்கில் தனித்துப் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை சகல தேர்தல் மாவட்டங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் வவுனியாவில் நாம் கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம். குறிப்பாக தேர்தலை அணுகும் வியூகங்கள், விஞ்ஞாபன தயாரிப்பு, ஆசனப் பங்கீடு குறித்து ஆழமாக நீண்டநேரம் ஆராய்ந்திருந்தோம். ஆசனப் பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள் இறுதி செய்யப்படும் செயற்பாடுகள் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளன.
இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று வடகிழக்கு தேர்தல் மாவட்டங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமது ஜனநாயக பலமான வாக்குகளை வழங்கியிருந்தார்கள். அதேநேரம் தற்பொழுதும் முக்கியமான தருணத்தில் இப்பொதுத் தேர்தல் இடம்பெறுவதால் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக கூட்டமைப்பின் கீழ் ஒன்று திரள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.





