பேஸ்புக் கணக்கிற்காக பெயரையே மாற்றிய பெண்!!

286

Facebook

தனது உண்மையான பெயரை பேஸ்புக்கிற்காக அதிகாரபூர்வமாக மாற்றிய பின்னும் தனது கணக்கில் நுழையவிடாமல் தடுப்பதன் மூலம் பேஸ்புக் நிறுவனம் முட்டாள்தனமாக நடந்துக்கொள்வதாக இங்கிலாந்து பெண் குற்றசாட்டியுள்ளார்.

தென் கிழக்கு லண்டனை சேர்ந்த 28 வயது பெண் ஜெம்மா ரோஜர்ஸ். இவர் 2008ல் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கும் போது பழைய நண்பர்கள் மற்றும் அந்நியர்களின் தொல்லைகளை தவிர்க்கும் வகையில் ஜெம்மாராய்ட் வான் லாலா என்ற புனைப்பெயரை பயன்படுத்தியுள்ளார்.

ஆனால், சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் அவரின் பெயருக்கான ஆதார சான்றிதழை கேட்டுள்ளது. இவரும் போலியாக ஒரு ஆவணத்தை தயாரித்து அனுப்பியுள்ளார். அது போலியான ஆவணம் என்பதை அறிந்துக்கொண்ட பேஸ்புக் அவரது கணக்கை முடக்கிவிட்டது.

இதனால் தனது புனைப் பெயரான ஜெம்மாராய்ட் வான் லாலா என்பதையே தனது அதிகாரபூர்வ பெயராக மாற்றிக்கொண்டார். அதற்கான ஆவணங்களையும் பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். ஆனால், பேஸ்புக் நிறுவனமோ, இதை நாங்கள் கவனிக்கிறோம் என்ற வழக்கமான பதிலையே கொடுத்துள்ளது.

தனது உண்மையான பெயரை மாற்றிய பிறகும்கூட தனது கணக்கு முடக்கிவைக்கப்பட்டுள்ளதால் கடுமையான கோபம் அடைந்துள்ள அந்த பெண், பேஸ்புக் நிறுவனம் தன்னை ஏமாற்றியதுடன் முட்டாள்தனமாகவும் நடந்துக்கொள்வதாக கூறியுள்ளார்.