
குசல் ஜனித் பெரேராவின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, டில்ஷானின் நிதான ஆட்டம் அதற்கு துணை நிற்க இலங்கை 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று அசத்தியது.
பாகிஸ்தான் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்த 288 ஓட்டங்களை இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 48.1 ஓவர்களில் அடைந்து வெற்றிபெற்று, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.
கண்டி பல்லேகலையில் நேற்று நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக அசார் அலி மற்றும் அஹமட் ஷேசாட் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி ஆரம்பம் முதலே அபாரமாகத் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையை இந்த ஜோடி உயர்த்தியது. அஹமட் ஷோசட் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் பத்திரனவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பிறகு 2ஆவது விக்கெட்டிற்காக மொஹமட் ஹபீஸ் களமிறங்கினார். இவர் 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்த போதிலும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அசார் அலி நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 79 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் திலகரத்ன டில்ஷானின் பந்துவீச்சில் சிறிவர்தனவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
288 என்ற வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான தில்ஷான் மற்றும் குசல் பெரேரா ஆகியோர் அபாரமாகச் செயற்பட்டனர். அதிரடி ஓட்ட சேர்க்கையில் ஈடுபட்ட குசல் 18 பந்துகளில் அரைச்சதம் பெற்றார். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 7 ஓவர்களில் 85 ஓட்டங்கள் வரை பெற்றிருந்தது. 25 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றார் குசல். தில்ஷான் 48 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் மத்தியூஸ் மற்றும் திரிமான்னே ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இறுதிவரை களத்தில் நின்ற சந்திமால் 48 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இலங்கை அணியின் இந்த வெற்றியோடு தொடர் 1–1 என்ற சமநிலையில் இருக்கிறது.





