
பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் நேற்று நடந்தது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
பங்களாதேஷ் அணி வீரர்களின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறிய அந்த அணியின் குயின்டான் டி கொக் 7 ஓட்டங்களுடனும், டுபிளிஸ்சிஸ் 6 ஓட்டங்களுடனும், அம்லா 15 ஓட்டங்களுடனும், ரோசவ் 17 ஓட்டங்களுடனும், வெளியேற்றினர்.
இந்தநிலையில் மழை குறுக்கிட போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்கா 40 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
டுமினி 51 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 44 ஓட்டங்களையும் எடுத்தனர். சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல்ஹசன் 3 விக்கெட்டுக்களை சாய்த்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் முஸ்தாபிஜூர் ரஹ்மான், ருபெல் ஹூசைன் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதில் ஷகிப் அல்-ஹசனின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 201 ஆக நேற்று உயர்ந்தது. இன்னும் 7 விக்கெட்டுக்களை எடுத்தால் பங்களாதேஷ் வீரர்களில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெறுவார்.
பின்னர் டக்வொர்த்-லூயிஸ் விதிப்படி 170 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று பங்களாதேஷூக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சவும்யா சர்காரும், தமிம் இக்பாலும் தென்னாபிரிக்க பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.
அவர்களை தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்கள் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 154 ஓட்டங்களைக் குவித்து வெற்றியை எளிதாக்கினர்.
சவும்யா சர்கார் 90 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பங்களாதேஷ் அணி 26.1 ஒவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிம் இக்பால் 61 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
தென்னாபிரிக்காவுக்கு எதிராக அந்த அணி ஒரு நாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
விஸ்வரூபம் எடுத்து வரும் பங்களாதேஷ் அணி உள்ளூரில் தொடர்ச்சியாக வென்ற 4-வது தொடர் இதுவாகும்.
ஏற்கனவே சிம்பாப்வே (5-0), பாகிஸ்தான் (3-0), இந்தியா (2-1) அணிகளுக்கு எதிரான தொடர்களையும் பங்களாதேஷ் அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.





