தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் கந்தையா சிவநேசன் நேற்று (18.07.2015) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்..
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்) 3 மாவட்டங்களில் போட்டியிடுகின்றோம். வன்னி மாவட்டத்தில் கந்தையா சிவநேசன், யாழ் மாவட்டத்தில் த.சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாளேந்திரன் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றோம்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மகிந்த ராஜபக்ஸ அரசு திட்டமிட்டுப் பறித்தது. ஆயுதப் போராட்டமாயிருந்தாலும் கூட அரசியல் நடவடிக்கைகளில் தான் நான் அதிகம் மேற்கொண்டிருந்தேன். கடந்த 25 வருடங்களாக வவுனியா மாவட்டத்தில் அரசியல் பணியினை மேற்கொண்டு வந்துள்ளேன்.
அரசியல்வாதி என்ற நிலைப்பாட்டில் நான் இல்லை. இன்றும் போராளி என்ற நிலைப்பாட்டடில்நான் இருக்கின்றேன். ஆயுதம் தாங்குபவர்கள் போராளியல்ல. போராளி என்பது மக்களின் தேவைகளை எந்த வழியிலாவது பெற்றுக்கொடுப்பதே.
கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுடைய போராட்டம் நடைபெற்றக்கொண்டே இருக்கின்றது. ஆரம்பத்தில் சாத்வீகப் போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் சாத்வீகப் போராட்டம் சாத்தியமில்லை என்றால் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற கருத்துக்களை அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள்.
ஆயுதப்போராட்டம் சரியா? பிழையா? என்பதற்கு அப்பால் ஆயுதம் ஏந்த வைக்கப்பட்டார்கள். சிங்கள தேசியவாதம் அல்லது சிங்களப் பேரினவாதமும் அதனுடைய அன்றைய கட்டமைப்பும்தான் எங்களை ஆயுதம் ஏந்த வைத்தது என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
-பிராந்திய செய்தியாளர்-






