உயிரிழந்த கிரிக்கெட் வீரர் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று!!

573

Paavalan

லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பருத்தித்துறையிலுள்ள சுப்பர் மடம் இந்து மயானத்தில் இடம்பெற்றன.

லண்டனிலிருந்து எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக யாழ்ப்பாணம் – பருத்தித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாவலனது பூதவுடலுக்கு, கிரிக்கெட் வீரர்கள், பாடசாலை மாணவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் இன்று அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பிற்பகலில் பருத்தித்துறை சுப்பர் மடம் இந்து மயானத்தில் பாவலனின் பூதவுடல் தீயுடன் சங்கமமாகியது.

லண்டன் – சறே – சேர்பிட்டன் பகுதியிலுள்ள ரீகிரியேஷன் மைதானத்தில் கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனம் நடாத்திய கிரிக்கெட் போட்டித் தொடரில், மானிப்பாய் பரீஷ் விளையாட்டுக் கழக அணியில் பத்மநாதன் பாவலன் (24) பங்கேற்றிருந்தார்.

எதிரணியினர் வீசிய பந்து அவரது நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதால் அவ் விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த பத்மநாதன் பாவலன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவர் 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். உயர்தரத்தில் கணித்துறையில் கல்வி பயின்றார்.

பாடசாலைக் காலத்தில் கிரிக்கெட் அணியிலும், சதுரங்க அணியிலும் பங்கேற்று பாடசாலைக்கு பல வெற்றிகளைத் பெற்றுக் கொடுத்துள்ளார். இவரது காலத்தில் சதுரங்க போட்டியில் நாட்டப்பட்ட வெற்றி இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

பாடசாலை கல்விக்குப் பின்னர் பாவலன் 2010ல் லண்டனுக்குச் சென்றார். அவரது தந்தையார் 1997 இல் நோய் காரணமாக உயிரிழந்திருந்தார். தாயாரும் ஒரு சகோதரியும், ஒரு சகோதரனும் பருத்தித்துறையில் வசித்து வருகின்றனர்.