முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை குறைப்புக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு!!

301

Rajiv_killers_grid360

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்பட 3 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனை, கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து, தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், யு.யு.லலித், ஏ.எம்.சப்ரே ஆகியோர் முன்பு கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் மீதான தண்டனை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திடீரென மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

அதில், 3 பேருக்கு தண்டனை குறைக்கப்பட்டது மற்ற குற்றவாளிகளுக்கும் இது வாய்ப்பாக அமையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 3 பேரின் தண்டனை குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.