கனவுகளின் நாயகன் அப்துல் கலாம் பற்றி உங்களுக்குத் தெரிந்ததும் தெரியாததும்!!

1098

Kalam

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவருமான அப்துல் கலாம் இன்று மேகலாயாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83.

குடியரசுத் தலைவராக பதவி வகித்த போதிலும், மாணவர்களின் மேல் அபாரமான நம்பிக்கை கொண்டிருந்தவர். மாணவர்களுக்கும், அவருக்குமான உறவு மிகவும் பின்னிப்பிணைந்தது. அதற்கு உதாரணமாக திகழும் வகையில் நேற்று ஐ.ஐ.எம் கருத்தரங்கில் பேசிக் கொண்டிருக்கும் போதே தன்னுடைய இறுதி மூச்சினை நிறுத்திக் கொண்டுள்ளார் கலாம்.

ஏழைக் குடும்பத்தின் இணையில்லா வைரம்..

மாணவர்களுக்கு உதாரண மனிதராக விளங்கிய கலாம், ஏழைக் குடும்பத்தில் பிறந்து விஞ்ஞானியாய் ஜொலித்து பின்னர், குடியரசுத் தலைவரானவர். அதனாலேயே, மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்பதில் அவர் உறுதி மிக்கவராய் விளங்கினார்.

கனவுகளின் நாயகன்..

‘கனவு காணுங்கள் வெற்றி பெறுவீர்கள்’ என்ற பொன்னெழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் கலாம். 1999 ஆம் ஆண்டில் விஞ்ஞான ஆலோசகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த கலாம் அவர்கள், அதன்பின்னர் இரண்டு வருடங்களுக்குள் கிட்டதட்ட 1 லட்சம் மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்ற தீர்மானத்தில் ஸ்திரமாக இருந்தார்.

மாணவர்களால் மன நிறைவு..

தான் இளைஞர்களுடன் முக்கியமாக பள்ளி மாணவர்களுடன் இருக்கும் போது உயர்வாகவும், நிறைவாகவும் உணர்வதாகவும் தெரிவித்தவர் அப்துல்கலாம்.

மாணவர்களிடம் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாக அவர்களுடைய கற்பனைத் திறனை ஊக்குவித்து இந்தியாவை வல்லரசாக மாற்ற முடியும் என்று ஆணித்தரமாக கூறியவர் கலாம் .குழந்தைகள் போன்று உள்ள மாணவர்களை தலைமைப் பண்பு மிக்கவர்களாக உருவாக்குவதே, சிறந்த கல்வி முறையாக இருக்க முடியும் என்றும் தெரிவித்தவர் அவர்.

அவர் குடியரசுத்தலைவராக இருந்த காலத்திலும், அதற்கு பின்னரான காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தோரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும், அதிபராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும், பேராசிரியராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேர்ப்பு, வருகை ஆசிரியராகவும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள்தான் உயிர் மூச்சு..

மாணவர்களை விரும்பி, உயிர் மூச்சாய் ஏற்ற கலாம் அவர்கள் மாணவர்களிடையே மரித்திருப்பது அவருடைய மாண்பையும், கடைசி நிமிடம் வரையிலும் சோம்பல் அண்டாமல் உழைத்த அவரது சுறுசுறுப்பின் வலிமையையே ஒவ்வொரு மாணவனுக்கும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
விருதுகள்..

1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

அப்துல் கலாம் எழுதிய நூல்கள்..

அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.