கனவுப் புத்தகத்தை நிறைவு செய்யாமல் மறைந்துப்போன அப்துல் கலாம்!!

571

Kalammmm

“எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும்” என்ற தலைப்பில் எழுதி வந்த புத்தகத்தை முழுமையாக எழுதி நிறைவு செய்யாமலேயே முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்ட அப்துல் கலாம், தனது வாழ்க்கை வரலாற்றை ‘அக்னிச் சிறகுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார்.

‘இந்தியா 2020’ என்பது உள்பட பல புத்தகங்களை அவர் எழுதி உள்ளார். 2020ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

‘கனவு காணுங்கள்’ என்ற தாரக மந்திரத்தை உருவாக்கி இளைஞர்களின் சிந்தனையை தட்டி எழுப்பினார். இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடனும், திட்டங்களுடனும் இந்தியா-2020 என்ற புத்தகத்தை அப்துல்கலாம் எழுதியிருந்தார்.

இதேபோல், தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றும் திடங்களுடன் “எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்” என்ற புத்தகத்தை எழுதிவந்தார்.

தமிழில் அவர் எழுதிவந்த இந்த புத்தகத்தின் 7 அத்தியாயங்கள் மட்டும் நிறைவடைந்திருப்பதாக கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சியை சார்ந்து அவர் எழுதிவந்த “எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்” என்ற புத்தகம் முழுமையாக நிறைவடையும் முன்னரே அவர் உயிரிழந்த சோகத்தை தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே கருத வேண்டும்.