தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சிவநாதன் கிஷோர் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி!!(காணொளி)

445

P1180290

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சிவநாதன் கிஷோர் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் தெரிவித்த கருத்துக்கள்..

சிவநாதன் கிஷோர் ஆகிய நான் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் 1991ம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்து யுத்த காலத்தில் பல மனிதாபிமான மக்கள் சேவைகளைப் புரிந்தேன். பின்னர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட தேர்தல் மூலம் செயலாளராக நியமனம் பெற்றேன்.

அக் காலப்பகுதியில் இறந்த உடல்களை யுத்தப் பிரதேசங்களுக்கு கொண்டு சென்று உறவினர்களிடமும் புலிகளிடமும் இராணுவத்திடமும் கையளித்தேன்.

2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் வன்னி மாவட்டத்திற்கு என்னை விடுதலைப்புலிகள் தமிழரசுக்கட்சி சார்பில் தெரிவு செய்தனர். இத் தேர்தலில் தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். இக் காலப்பகுதியான 2004ம் ஆண்டு தொடக்கம் 2010 ஆண்டு வரை மக்களுக்கு கடமை ஆற்றியுள்ளேன்.

2010ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவற்கு தமிழரசுக் கட்சிக்கு எனது விண்ணப்பத்தை கையளித்தேன். அவர்கள் தருவதாக வாக்குறுதி அளித்து வேட்பு மனு முடிவடையும் நாட்களிற்கு இரண்டு தினங்களிற்கு முன்பாக புலிகளால் நியமிக்கப்பட்ட உமக்கு இம் முறை தமிழரசுக் கட்சியில் ஆசனம் தர இயலாது. நீர் புலிகளிடம் சென்று ஆசனத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.

தமிழரசுக் கட்சியில் 2015ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்குமாறு விண்ணப்பித்தேன். இம் முறையும் எனது வேட்பு மனுவை நிராகரித்துள்ளார்கள். இவர்கள் தொடர்ந்தும் என்னை ஏமாற்றி வருவதன் காரணமாக மக்கள் சேவையைத் தொடர்வதற்கு நிரந்தர தமிழ்க் கட்சியொன்றினை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இம்முறை நான் தமிழர் விடுதலை கூட்டணியில் வன்னி மாவட்ட அமைப்பாளராக எனது சேவையைத் தொடர எண்ணியுள்ளேன் என்று தெரிவித்தார்.

அவர் வழங்கிய முழுமையான செவ்வியினை கீழுள்ள கானொளியில் காணுங்கள்..

-பிராந்திய செய்தியாளர்-