தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

407

CRICKET-SRI-RSA

தென்னாபிரிக்க அணியுடனான 5 ஒருநாள் ​போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி அமோக வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று பகலிரவு போட்டியாக இடம்பெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 180 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

​நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி குமார் சங்கக்காரவின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 137 பந்துகளில் 18 நான்கு ஓட்டங்கள், 6 சிக்சர்கள் அடங்கலாக 169 ஓட்டங்களைப் பெற்றார். இதுவே சங்ககார ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும். மேலும் தரங்க 43 ஜயவர்த்தன 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 31.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 180 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது. தென்னாபிரிக்கா சார்பில் துடுப்பாட்டத்தில் குறிப்பிடும்படியாக எவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை.

பந்துவீச்சில் இலங்கை அணியின் திசார பெரேரா, ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் தில்ஷான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.

இதன்படி 5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி வரும் 23ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸமைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.