மலையோடு போராடி வெற்றிபெற்ற மாமனிதர் : ஓர் அதிசய சம்பவம்!!(படங்கள், காணொளி)

417

11

தனி மனிதனாக மலையையே உடைத்து, 40 கி.மீ. சுற்றளவை சுருக்கி, கயா நகரத்துக்கு செல்ல வழி ஏற்படுத்தித் தந்த, மலையினும் உறுதிபடைத்த மாமனிதர் மஞ்சி.

பீகார் மாநிலத்தில் கயா நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் கெஹ்லார், இங்குதான் தஸராத் மஞ்சி வாழ்ந்தார். அடிப்படையில் ஒரு ஏழைத் தொழிலாளியான அவர், தனது மனைவி பல்குனி தேவியை காதலித்து திருமணம் செய்துகொண்டவர்.

அவர்கள் வாழும் கிராமத்தில் இருந்து நகரமான கயாவுக்கு செல்ல வேண்டுமானால், நடுவில் இருக்கும் கரடுமுரடான மலைமீது ஏறிச்செல்ல வேண்டும். அல்லது, 70 கி.மீ. மலையை சுற்றிதான் செல்ல முடியும்.

12

இதனால் இந்த மலை மீது ஆண்களும் பெண்களும் சமயங்களில் ஏறுவதுண்டு. இப்படி ஏறும்போதுதான் மஞ்சியின் மனைவி பல்குனிதேவி கால் இடறி விழுந்து அடிபட்டுள்ளார்.

ஆனால், அவருக்கு சிகிச்சையளிக்க அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல 70 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். இதனால் மலையில் விழுந்த பல்குனிதேவி நீண்ட நாள் நோயாளியாக இருந்து 1959ல் இறந்துவிட்டார்.

14

காதல் மனைவியை இழந்த மஞ்சிக்கு ஆறாத வடு ஏற்பட்டது. இனி எதிர்காலத்தில் தன் கிராம மக்கள் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்ற நல்ல நோக்கத்திலும் மன உறுதியோடும், அந்த மலையை தோண்ட ஆரம்பித்தார்.

இவர் மலையோடு போர் செய்ய பயன்படுத்தியது சுத்தியல், உளி கொண்ட தனது கரங்கள் மட்டுமே. தொடர்ந்து 22 ஆண்டுகள் (1960-1982) இரவு பகலாக தனது லட்சியத்துக்காக உழைத்தார்.

360 அடி (110 மீ) நீளம், 30 அடி அகலம் 25 அடி உயரம் தோண்டி மலையில் ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தி பாதை கண்டார்.

கயா மாவட்டத்தின் தொகுதிகளான அத்ரிக்கும், வாஸிர்கஞ்ச்க்கும் இடையிலான 55 கி.மீ. தூரத்தை 15 கி.மீ. ஆக சுருக்கியுள்ளது இப்பாதை.

இன்று ”மலை மனிதர்” என்று அவர் புகழ்பாடும் அந்த கிராம மக்களே, ஆரம்பத்தில் அவரை பரிகசித்தனர், பைத்தியம் என்றனர்.

பின்னர் அவரது அயராத உழைப்பையும் விடாமுயற்சியையும் பார்த்து வியந்த அவர்கள், சாதனை நிறைவடைகிற தருவாயில், அவருடைய பணியின்போது உணவு, நீர், கருவிகளும் கொடுத்து உதவினர்.

இதன் மூலம் தனது குறிக்கோளை நிறைவேற்றி சாதனை படைத்தார். மஞ்சியின் சாதனையை பீகார் அரசும் அங்கீகரித்தது. ஊடகங்களும் பாராட்டின.

மத்திய அரசும் அவரது சமூக சேவையை பாராட்டிக்கு மஞ்சிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. அவர் கடைசி நாட்களில் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.

2007 ஆகஸ்டு 17ல் மஞ்சி இறந்தார். அவர் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து மலைப்பாதையில் 3 கி.மீ. தூரத்துக்கு உலோக சாலை அமைக்க பீகார் அரசு கெஹ்லார் பெயரில் அனுமதித்தது.

மேலும், கெஹ்லார் கிராமத்தில், மஞ்சியின் பெயரில் ஒரு மருத்துவமனையும் அவர் விருப்பப்படியே உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படத்துக்குரிய முழுமையான கதையே அவர் வாழ்வில் இருந்துள்ளதால், மஞ்சியின் முழு சம்மதத்தோடு அவர் மொழியிலேயே அவரது வாழ்வு படமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருமே ஒரு குறிக்கோளோடுதான் படைக்கப்பட்டிருக்கிறோம். அதில், மஞ்சி பிறந்தது எந்த கடமைக்காக என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது.

மக்கள் பயனுள்ள உலக அதிசயத்துக்குள்ளும் ஒரு காதல் மனைவியின் பிரிவுதான் சக்தியின் ஊற்றுக்கண்ணாக மாறியிருக்கிறது. தாஜ்மஹால் உருவாக, காதல் மனவி மும்தாஜின் மரணம் ஷாஜகானை வாட்டியது போலவே.

”எறும்பு ஊர கல்லும் தேயும்” என்பது பழமொழி, இங்கே இந்த இரும்பு மனிதர் உழைப்பில் ஓர் மலையே பிளந்திருக்கிறது.

மஞ்சியினுடைய இந்த சாதனை ஒவ்வொரு மனிதனையும் தனக்குள் இருக்கும் சக்தியை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

15 16 17 18 19