
தாமு என்ற நடிகர் விவேக் போலவோ வடிவேலு போலவோ சினிமாவில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் இல்லை. நிறையப் படங்களில் நடித்திருந்தாலும் ‘கில்லி’ படத்தில் ஓட்டேரி நரி என்ற கதாபாத்திரம் உடனே நினைவுக்கு வரும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இறந்த போது, அவரது உடல் அருகேயே அமைதியாக அமர்ந்திருந்தார் தாமு. யாரும் இவரிடம் பேட்டி கேட்கவும் இல்லை. யாருக்கும் இவர் பேட்டியும் கொடுக்கவும் இல்லை.
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் அருகிலேயே தாமு அமர்ந்திருந்தார்.
அப்துல் கலாம் உடல் மீது வைக்கப்படும் மலர் வளையங்களை எடுத்து அப்புறப்படுத்தும் பணியை மிக அமைதியாக அவர் செய்து கொண்டிருந்தார். விவேக் போல அப்துல்கலாமுக்கும் தாமுவுக்கும் அந்தளவுக்கு நேரடியான பரிச்சயம் இருக்குமா? என்றால் தெரியாது.
ஆனால் தாமுவின் முகத்தில் எதையோ இழந்து விட்டது போன்ற ஒரு சோகத்தை காண முடிந்தது. ஆழமான வருத்தத்துடன் அவர் காணப்பட்டார்.
சினிமாவை பொறுத்த வரை தாமு ஒரு பொதுஜனம் போன்றவர்தான். சாதாரண கதாபாத்திரங்களில் நடிப்பவர்தான். இவரை போன்றவர்களின் மனதையும் கலாம் அவர்களால் வெல்ல முடிந்தது என்றால் அதுதான் கலாம்.






